1477. அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்ப வானவர் தேவனை நாடொறும் வந்தப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.1 (ப. இ.) திருவருள் துணையால் திங்களாகிய இட கலையையும் ஞாயிறாகிய பிங்கலையையும் அடக்குவன். அடக்கி எந்நாளும் ஒப்பில்லாத சிவபெருமானின் திருவடியிணையை நாடுவன் தேவர் முதல்வனாகிய அச் சிவபெருமானையே நாடொறும் வணங்குவன். அவ்வாறு வணங்கும் திறங்களெல்லாம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்கு வகையில் அடங்கும். இஃது உயிராவணமிருந்து உற்றுநோக்குதலாம். (அ. சி.) அந்திப்பன் - அடக்குவேன். திங்கள் ஞாயிறு - இடகலை பிங்கலை. வகை - நான்கு வகையான மார்க்கங்கள். (3)1478. அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி உன்னுவர் உள்மகிழ்ந் துண்ணின் றடிதொழக் கண்ணவ னென்று கருது மவர்கட்குப் பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.2 (ப. இ.) ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாச் சிவனை வானவர்கள் ஆயிரம் திருப்பெயர் சொல்லி அண்ணல் என்று நினைத்து வழிபடுவர். அச் சிவபெருமானை நாம் திருவடிதொழுதல்வேண்டுமென்று எண்ணினால் அப்பொழுதே அவன். மகிழ்ந்து தொழுதற்குத் துணையாய் உயிர்க்குயிராய் உண்ணின்று. அவனே அறிவிக்கின்ற கண்ணாவன் - அங்ஙனம் கருதுவார்க்குப் பண்ணவனாகிய அச் சிவபெருமான் அவ்வுயிரினிடத்துப் பேரன்பு பூண்டு அவ்வுயிரினைப்பற்றி நின்றான் கண்ணவன்: அவன் கண்; அவனே அறிவிக்கின்ற கண்ணாவான். (அ. சி.) உண்ணின்று - மனமார. (4) 1479. வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும் பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின் மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை நேசத் திருந்த நினைவறி யாரே.3 (ப. இ.) பாசிக்குளம் போலும் கருக்குழியில் வீழ்ந்து உழலும் நன்னெறி கல்லாத மனத்தோரைப் பார்க்கின், நல்லார் திருமுறையினை ஓதியும், அம் முறையினை எழுதிப் பூசித்தும், அதன் வழியாக நறுமலர்
1. உயிரா. அப்பர், 6. 25 - 1. 2. கண்ணவன்காண். அப்பர், 6. 52 - 1. " பேராயிரம்பரவி. அப்பர், 6. 54 - 8. 3. ஓதி உணர்ந்தும். திருக்குறள், 834.
|