1784. வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி ஆரா அமுதளித் தானந்தி பேர்நந்தி பேரா யிரமுடைப் பெம்மான்பே ரொன்றினில் ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.1 (ப. இ.) மீண்டு வாரா வழியருள்புரிகின்ற முழுமுதற் சிவமாகிய மாநந்தியின் திருப்பெயர் 'நமசிவய.' அந்நந்தியே ஆருயிர்களுக்கு ஆரா அமுதளித்துப் பேரின்பம் பெருக்கும் இன்பவுருவினன். இன்பவுருவினன் என்பதே ஆனந்தி. அவனுக்கு அருட்பண்பு காரணமாக அளவில்லாத திருப்பெயர்கள் உண்டு. அத் திருப்பெயர்களுள் 'சிவ' என்னும் ஒப்பில்லா ஒரு பெயரில் அன்புபூண்டு இன்புற ஓதிக் குறையாத திருவருட்கடல் ஆடுக என்று பணித்தருளினன். 'குறைவிலா மங்கல குணத்தனாதலின், அறைகுவர் சிவனென அறிவின் அறிவின் மேலையோர்' எனக் காஞ்சிப் புராணத்தின்கண் மாதவச் சிவஞான முனிவரனார் அருளுமாற்றன் இவ் வுண்மை எண்மையினுணரலாம். (2) 1785. ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் தேடியுங் கண்டேன் சிவன்பெருந் 2தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்தென் ஊடுநின் றானவன் தன்னரு ளுற்றே. (ப. இ.) திருவருள் கைவரப்பெறுதலான் ஆடுதல், பாடுதல், இன்பக் கண்ணீர் உகுத்தல், ஓலமிடுதல், இடம் இடம்தோறும் சென்று நாடுதல் ஆகிய நற்பணி புரிந்து சிவன் பெருந்தன்மையை அவன் உணர்த்த உணர்ந்தேன். அவன் என்றும் என்னுடன் கூடியிருக்கும் இயல்போடே புருவ நடுவின்கண் அறிவாலன்றி அருளால் உணரும் திருவடியைத் தந்தருளினன். தந்தருளி, என்னுடன் வெளிப்பட்டு நின்றருளினன். இதுவும் திருவருளைப் பொருந்தியே என்க. அறிவாலன்றி அருளாலறிவதைக் குறியாக்குறி என்றருளினர். (3) 1786. உற்ற பிறப்பும் உறுமல மானதும் பற்றிய மாயாப் படல மெனப்பண்ணி அத்தனை நீயென் றடிவைத்தான் பேர்நந்தி கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. (ப. இ.) ஆருயிரினோடு பண்டே வேறறப் புல்லிய மலப்பிணிப் பால் பிறப்புண்டாயிற்று. பிறப்புண்டாகவே உடல், உறுப்பு, உலகம், உணவு ஆகிய மாயாகாரியக் கூட்டங்களின் தொடர்பும், அவற்றை வேறென்றுணராது தானென்றே உணரும் மருள்பற்றும் உண்டாயின. அத் தொடர்புகள் நீயல்ல என்று அருளால் தெளிவித்து இவற்றிற்கு வேறாக இவற்றை இயக்கியும் இயங்கியும் நிற்பது நீ என்று நந்தி உணர்த்தினன். தன் திருவடியை அடியேன் முடியில் சூட்டியருளினன்.
1. பாரார். அப்பர், 6. 22 - 12. 2. ஆடுகின்றிலை. 8. ஆத்துமசுத்தி, 1.
|