1857. சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம் ஆம்பவ மில்லா அருட்பாணி முத்திரை ஓம்பயில் ஓங்கிய வுண்மைய கேசரி நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே. (ப. இ.) சாம்பவியோடுகூடிய நந்தியெங் கடவுளரின் திருவருட் பார்வையாகிய ஆருயிரின் பிறப்பினை அறுக்கும் உண்மை அடையாளம் அருட்பாணி முத்திரை. இதனையே சின்முத்திரை என்ப. இவ்வடையாளக் குறிப்பு ஒரு மலம் நீங்க இருமலங்கூட்டி அருமலம் மூன்றும் அகற்றி ஆருயிர் ஆலமர் செல்வனுடன் வேறன்றிப் புணரும் உண்மை இயற்கைப் புணர்ப்பாகும். பெருவிரல் இறையாகும் எனவும், ஆள்காட்டி விரல் ஆளாம் அடிமையாகிய ஆருயிர் எனவும், இருவிரல்களும் இணைந்து ஒற்றுமைப்பட்டு வட்டமாயிருப்பது கட்டற்று ஒட்டியுடன் உற்று மாளா இன்பத்து மீளாதழுந்தலாம் பெருவாழ்வு எனவும் கொள்க. நடுவிரல் வினையாகவும், அணிவிரல் மாயையாகவும், சிறுவிரல் மலமாகவும் கொள்க. அம்மூன்றும் விலகிநிற்றல் மீளா ஆளாகிய உயிரைவிட்டு மீட்டும் அவ் வுயிருடன் சேரும் செயலற்று அயலுற்று நிற்றல். ஓம்மொழி பயிலும் உண்மையை உடைய அடையாளம் கேசரியாகும். பொருள் சேர்புகழ் விளங்குகின்ற சிவபெருமான் திருப்புகழாகிய 'சிவயநம' என்று நாமம் ஓதுதல் ஞானமுத்திரை யாகும். (அ. சி.) ஆம்பவம் - இனி உண்டாகும் பிறப்பு. பாணிமுத்திரை - சின்முத்திரை. நாம்: நாமம் என்பதன் குறுக்கம். (3) 1858. தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும் ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால் ஏனைச் சிவமாஞ் சொரூப மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. (ப. இ.) கண்டத்திடத்து அருளோனாகிய சதாசிவன் வீற்றிருந்தருள்வன். திருவடியுணர்வாகிய சிவஞானத்தினால் அகத்தினுள் உணர்வுக்குணர்வாய் நற்சிவன் தோன்றுவன். வாய்வாளாமையாகிய மோனத்தினுள் சிவமாம் உருவம் மறைந்திடும். இதுவே மோன முத்திரை. முடிந்த முடிபாகிய வீடுபேறும் இதுவே. (அ. சி.) தானம் - கண்டம். மோனத்து முத்திரை - மவுனம். முத்தாந்த - முடிந்த. (4) 1859. வாக்கு மனமும் இரண்டு மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலு மூங்கையாம் வாக்கு மனமும் மவுனமாஞ் சுத்தரே ஆக்குமச் சுத்தத்தை யாரறி வார்களே. (ப. இ.) செயலறுந் தன்மையாகிய மௌனம் இரு வகைப்படும். ஒன்று வாய்; மற்றொன்று மனம். இவ் விரண்டும் ஒருங்கு செயலற்றாலே பயன் உண்டு. வாய்மட்டும் பேசாதிருந்தால் ஊமையே. இரண்டும்
|