மெல்லை ஆகிய மூவிடத்தும் கோடி வழங்கினன். கோடி - புதுஉடை. இறுதிக் காலத்து மக்கள் முதலாயினார் அன்பும் அழுகையும் துன்புமாய் நின்று அத்தா என்று அலறி அழைத்தனர். சிறிதும் புரண்டிலன். என்னென்றும் கூறிலன். பலர் நடுவே தெருவில் ஆட்சுமை யூர்தியாம் பல்லக்கேறி ஒல்லைச் சுடுகாடேகினன். (அ. சி.) அத்தா என்ன - அப்பா என்று கூப்பிட. (7) 194. வாசந்தி பேசி மணம்புணர்ந் தப்பதி நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப் பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே. (ப. இ.) வாயினால் அழகிய இனிய உறுதி உரைகளைப் பேசி நல்லாரை மணந்தனர். பின்பு, மணந்தார் ஒருவரைஒருவர் அன்பு போதுமென அமைந்து அறவே நினைப்பொழிவர். நினைப்பொழிந்து மாளுதலும் சுற்றத்தார் கால்கழி கட்டிலாகிய ஆசந்தியில் வைத்தெடுத்து அழுதிட்டுச் சுடுகாட்டில் கொண்டு போய்த் தீயிட்டுச் சுடுவர். காக்கைக்குப் பலியிடுவர். (அ. சி.) வாசந்தி - வாய் சந்தி; வாய்க்கு இனிமையான. ஆசந்தி - பாடை. பாசந்தி - பாசம் தீ: சுற்றம் நெருப்பிட்டு. (8) 195. கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார் மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே. (ப. இ.) மைதீட்டிய கண்ணையுடைய மனையாளும் மக்கள் முதலிய செல்வங்களும் தக்கவாறு இருக்க ஆவி உடம்பினை விட்டுப் போகுங்காலம் நிகழும் வழிவகைகள் எவ்வாறெனில்? வளிமுதலா எண்ணிச் சொல்லப்படும் வாத பித்த சிலேட்டுமம் என்னும் உடம்பாகிய வீட்டுக்குரிய நாடிகள் மூன்றும் கைவிடும். விடவே உயிரின் கருத்தழியும். உயிர் அச்சுறுதலாகிய. நீங்குதலைச் செய்யும். செய்யவே நெய்யாற் சமைத்த சோற்றை நாளும் உய்யலாமென்று விலாப்புடைக்க உண்டு வளர்ந்த உடம்பாகிய ஐம்பூதமும் பிரிந்து ஒழியும். ஐவர் என்பதற்கு ஐம்பூதங்களே யன்றி ஐங்காற்றுக்கள் என்றலுமொன்று. அவை, உயிர்க் காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவு காற்று என்பன. இவற்றைப் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் எனவுங் கூறுப. (அ. சி.) அச்சு அற - உயிர் நீங்க. ஐவர் - ஐம்பூதங்கள். (9) 196. பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைந்தன1 துன்புறு காலந் துரிசுவர மேன்மேல் அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.
1.எண்ணுகேன். அப்பர், 6. 99 - 1.
|