93
 

217. மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்
சிமிழொன்று1 வைத்தமை தேர்ந்தறி யாரே.

(ப. இ.) நாம் மகிழ்கின்ற செல்வ வாழ்வும் அச் செல்வத்தால் தேடும் மாடு முதலிய பல பொருள்களும் நீரில் செல்லும் கலம் இன்ன நேரத்தில் கவிழுமென்று எதிர்பாராத வகையாகத் திடும்மெனக் கவிழ்வதுபோல் அழிந்தொழியும். உயிரும் உடம்பும் சிலநாள்வரை வினைக்கீடாகப் பொருந்துமாறு சிமிழ்த்தலாகிய கட்டினள் உள்ளன. பின்பு அவ்வாக்கையின் கட்டினை விடுவித்து உயிரினைக் காலன் கொண்டு செல்கின்றனன். இங்ஙனம் கொண்டு செல்வதால் உடலுக்குரிய கட்டு அகற்றப் படுவதல்லாமல் உயிரினுக்குரிய கட்டு அகற்றப்படுவதில்லை. சிமிழ்ப்பு - கட்டு.

(6)

218. வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய்வார்கட்குக்
கூவுந் துணையொன்று கூடலு மாமே.

(ப. இ.) ஒருவர் இறக்குந் தறுவாயில் அவருடன் பலவகையாலும் ஒத்துவாழ்ந்த மனைவியும், மக்களும், உடன் பிறந்தார்களும் தனித்தனியே எங்களுக்குச் சொத்து என்ன இருக்கின்ற தென்று வினவுவர். எவ்வளவு பொருள் இருந்தாலும் இந்த நிலைமைதான் ஏற்படும். அதனால் நன்மைக்கு ஆகும் சிறந்த பொருளை வழிக்குத் துணையாம் புண்ணியத்தில் செலவு செய்தல் வேண்டும். அப் புண்ணியப் பயனாய்ச் சிவபெருமான் அருளால் தோன்றுவன். தோன்றித் திருவைந்தெழுத்தைச் செவியறிவுறுத்துவன். அம் மறையினை முறையாகக் கணிப்பார்க்கு வழித்துணையாக அது கை கூடும்.

(அ. சி.) விரிவு செய்வார்க்கு - அறவழியில் செலவிடுவார்க்கு. ஒன்று - சிவன் என்று.

(7)

219. வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

(ப. இ.) உடம்புடன் கூடிவாழ வேண்டு மென்னும் நீங்கா விருப்பமாகிய வேட்கை அளவின்றி மிகுந்தது. அதையொழித்து இறைவன் திருவடியைச் சேர வேண்டுமென்னும் உண்மையினை மேற்கொள்வார் ஒருவருமிலர். உயிர்ப்பாகிய பிராணவாயுவைப் போகவொட்டாது கட்டுந்தறி போன்று உடம்பகத்து அமைந்துள்ளது நடுநாடியாகிய சுழுமுனை. உயிர்ப்பு அதன் வழிச் செலுத்தும் பயிற்சியிலார்க்கு எவ்வகைத்


1. தவமறைந் திருக்குறள், 274.