(அ. சி.) பொருளதுவாய் - மெய்ப்பொருளாய். சுருளதுவாய் - புரிபோன்றதாய். துன்பச் சுழி - பிறவிச் சுழல். மருள் - மயக்கம். (10) 2516. வினையா மசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார் வினையாளர் மிக்க விளைவறி 1யாரே. (ப. இ.) ஊழ்வினை காரணமாக ஒரோவழி மெய்யடியார்கட்கும் அசத்து விளையும். அதனையும் உய்த்துணரார். அசத்து வருமாறு: "உம்பின் கண்ணதாகிய பிராரத்தவாசனை உயிர்க்குத் தாக்குவதாயுள்ளளவும் அதனானே வரும் விருப்பு வெறுப்புக்களும், அவை பற்றிக் காட்சிப்படும் மண் முதன் மாயைகளும், அவை பற்றி நிகழும் விபரீதவுணர்வுமாகிய அசத்துக்கள். (12. 4 - 2 சிவஞானபோதப் பேருரை.) அவ்வினை திருவடியுணர்வாகிய சிவஞானத்தால் நீங்குவதும் அருளால் தெரியார். வினை அருளால் அகலத் திருவடிப் பேறெனச் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தின் விரிவாகிய திருமறை ஓதும் அருமறையினையும் உணர்ந்து ஓதார். அவர் யாரென்னில் இருவினைக்கு அடிமைப்பட்ட கருமத்தராவர். அக்கருமத்தால் மீண்டும் மீண்டும் பல பிறப்புத் துன்பம் மிகும் என்னும் விளைவினையும் அறியார். வினை அகலத் திருவடிப்பேறாம் என்னும் மெய்ம்மை வரும் திருவைந்தெழுத்தின் வேறுபாட்டானுணர்க. 'சிவயநம'. இதன்கண் 'நம' என்பது வினையின் முதன்மையகன்று அவ்வினை கடையில் தடையாகநிற்பது குறிக்கும். 'சிவயசிவ' என்பது அவ் வினையகன்று அவ்வுயிர் சிவபெருமானுக்கு அடிமையாய் இறைபணியினொழுகும் இயல்பினைக் குறிக்கும் குறிப்பாகும். இவ்வுண்மையினை வரும் தொடர்பால் நினைவுகூர்க. முன்பின் உறுநமவால் முன்பின் மலம் ஆம் சிவத்தால், இன்பின் வழி விழுப்பே றெண். (அ. சி.) வினையாமசத்து - வினையாகிய கன்மம். வீடல் - கெடுதல். வீடென்னும் வேதம் - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேத நான்கினுள் வீடு என்று சொல்லப்படும் வேதம். வினையாளர் - கன்மம் உடையவர். (11)
24. முத்திநிந்தை (பேற்றுப் பழிப்பு) 2517. பரகதி யுண்டென இல்லையென் போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடு வார்கடை தோறுந் துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே. (ப. இ.) திருவருளால் செம்பொருட்டுணிவினரால் செப்பியருளப்பட்ட முப்பொருள் உண்மை விளக்கும் திருமறை திருமுறை முதலிய
1. வினையா. சிவஞானபோதம், 12. 4 - 2.
|