1032
 

வேறாய் ஆருயிர் பேருயிராம் சிவபெருமானுக்கு அடிமையாய் அவன் திருவடிக்கீழ் ஒடுங்கி இன்புறுவதே மாறா இயற்கை உண்மையாகும். இதனையே 'இலக்கணாதீதம் சுட்டும் சொரூபம்' என ஓதியருளினர் சொரூபம் - மாறாவியற்கை.

(அ. சி.) தொகும் - அடங்கும். சத்தாதி - ஓசை முதலிய. விட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டுவிடாத இலக்கணை என மூன்றும்.

(1)

2525. வில்லின் விசைநாணிற் கோத்திலக் கெய்தபின்
கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
இல்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிரெதி ராகுமே.

(ப. இ.) ஓங்கார வில்லும் நீங்கா ஒப்பில் திருவைந்தெழுத்து நாணும், பாங்கார் ஆருயிர் அம்புமாகக் கனிந்த திருவருளால் கோத்துச் சிவனாகிய குறி எய்துமாறு எய்தபின் புலனாகிய கொல் யானை ஐந்தும் அக் கோலால் சாய்ந்தன. அஃதாவது ஆருயிரின் முனைப்புத் தன்மை அற்றது என்பதாம். அறவே செயலற்ற நிலையாகிய இல், சமாதி என்ப. அதனுள்ளிருந்து அறிவுப் பெருந்திருவாம். அருளொளி மிகும். அவ்வுயிர்க்குச் செம்மணி ஒளிபோன்று சிவக் கதிர் உணர்விற் குணர்வாய்த் தோன்றியருளி இன்பூட்டும் என்க.

(அ. சி.) வில் - பிரணவம். விசைநாண் - அஞ்செழுத்து, கோத்து - சீவன் ஆகிய அம்பு கோத்து. இலக்கு - சிவம் ஆகிய குறி. களிறு ஐந்து - இந்திரியங்கள் ஐந்து. கோலொடு - சீவனுடைய பசுத்தன்மையுடன். இல் - சமாதிநிலை எறி கூரும் - எய்யும், கல் கலன் - மணி ஒளி.

(2)


26. தத்துவமசி வாக்கியம்

2526. சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்
தாவு பரதுரி யத்தினில் தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பதம்
ஓவி விடுந்தத் துவமசி உண்மையே.

(ப. இ.) ஆருயிர்ச் செயலறலாகிய சீவ துரியத்து நீ என்னும் தொம்பத நிலையே அவ் வுயிர்க்கு உள்ளது. அப்பாலாகும் அருட்செயலறல் என்னும் பரதுரியத்து அவ் வுயிர்க்கு அதுவாதல் என்னும் தத்பத நிலையே உளதாகும். பொருந்திய சிவச் செயலறலாகிய சிவதுரியத்து சிவத்தழுந்தலாகிய துய்ப்புநிலை. ஆகின்றாய் என்னும் அசிபத நிலையுளதாகும். இம் மூன்றும் செம் பொருளாம் சிவத்துய்ப்பில் அடங்கிவிடும். என்னை? இன்பத்துய்ப்பு மாற்றம் மனம் கழிய நின்ற தொன்றாகலின் என்க. ஆதல் அணைதல் அழுந்தல் சிவனடிக்கன்பு, ஓதுசெறிவோடறிவாம் ஓர் என்றவாறு ஆதல் பரதுரியத்தும், அணைதல் சிவதுரியத்தும் அழுந்தல் ஓவிடும் தத்துவமசி உண்மையினுங் காண்க.

(அ. சி.) ஓவி விடும் - விட்டு நீங்கும்

(1)