1063
 

2591. குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ்
செறியாச் செறிவே சிவமென லாமே.

(ப. இ.) மறவர்நினைவாய், மலர் மணம்போன்று ஓரிடப்புணர்ப்பாய், ஓய்விலா உணர்வாய், மெய்ப்புணர்ப்பாய், ஓருணர் நினைவாய் நன்னெறியாநிற்கும் பெரும்பொருளாம் நந்தியினை உணர்ந்தேன். உணரவே அவன்றன் அழிவிலாத் திருவருள் அடியேன்பால் பொருந்தும். பொருந்தவே வேறறப்புணரும் புணர்ப்பாய்ப் புணர்ந்தேன். அப் புணர்ப்பின் மணத்தால் சிவம் என்னும் திருப்பெயரைப் பெற்றுய்ந்தேன். செறியாச் செறிவு - இரண்டிணை ஒன்று.

(அ. சி.) குறியாக் குறி - மறந்து நினையாக் குறி கூடாத கூட்டம் - கடலும் அலையும்போலக் கூடுங் கூட்டம். அறியா அறிவு - மறப்பற்ற மெய்ஞ்ஞானம். அவிழ்ந்து - கலந்துநின்று. ஏக சித்தமாய் - ஒருமனதாய். செறியாச் செறிவு - கூடாத கூட்டம்.

(3)

2592. காலினில் ஊறுங் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை
காவலன் எங்குங் கலந்துநின் 1றானன்றே.

(ப. இ.) மேலோதிய ஐம்பெருந் தன்மைக்கு ஒருபுடையொப்பு வருமாறு: காற்றினில் உண்டாம் ஊறும், கரும்பினில் உண்டாம் கட்டியும், பாலினுள் உண்டாம் நெய்யும், பழத்தினில் உண்டாம் சுவையும், பூவினில் உண்டாம் மணமும்போன்று பிரிவற நின்றருள்கின்றனன் எம்மிறையாகிய சிவபெருமான். அவனே அனைத்துயிர்க்கும் அனைத்து உலகங்கட்கும் நீங்காக் காவலன் ஆவன். அவன் அகல் நிறைவாகவும் ஆருயிர்கள் அமைநிறைவாகவும், அனைத்துப் பொருளும் அடங்கு நிறைவாகவும் அமையுமாறு கலந்துநிற்கின்றனன். அகல்நிறைவு - வியாபகம். அமைநிறைவு - வியாப்பியம். அடங்குநிறைவு - வியாத்தி.

(அ. சி.) ஊறும் - பரிசமும். கட்டியும் - வெல்லமும். நெய் - வெண்ணெய்.

(4)

2593. விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
விருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் 2றாரே.


1. பண்ணையும். சிவஞானபோதம், 2. 1 - 3.

" உற்ற. 8. அதிசயப்பத்து, 9.

2. துஞ்சிருள். அப்பர், 4. 70 - 5.

" பெருந்திரு. " " 73 - 1.

" சாத்தி. " 5. 60 - 3.

" குரும்பைமுலை ஆரூரர், 7. 16 - 1.

" எற்கமலம். குமரகுருபரர், பண்டாரமும்மணி, 24.