1085
 

(ப. இ.) பேரொடுக்கப் பேரூழிக் காலத்து மிக்கு விளங்குவது இருள் வண்ணமேயாகும் ஆண்டும் நிலைபெற்று மாறாது மன்னும் பேரொளிப் பெரும்பொருள் சிவபெருமானாவன் அவனே நிலைபெற்று ஒளிரும் பேரொளியான். அளவிலா அன்பால் அகம்புறம் ஒத்துத்தொழும் மெய்யடியார்கட்கு மறையாதுநின்று வெளிப்பட்டருளும் இயற்கைத் தன்மையன் சிவன். விளக்கமிக்க ஒளிசேர் நிறையமுதம் ஆதற்பொருட்டு ஆண்டுத் தோன்றிய பெருநஞ்சினை உண்டு கண்டத்து அடக்கியவன் சிவன். இவையனைத்தும் அவனுடைய திருவுள்ளப் பாங்கின்படியாகும்.

(அ. சி.) அவ்விருண் மன்னும் - உலக முடிவில் ஏற்படும் இருளில் அடங்கும். ஒளியான் - வெளிப்படுவான் அளங்கொளி - அலங்கு ஒளி - இலங்குகின்ற ஒளி. நஞ்சாரும் களம்கொள் ஈசன் - விடமுண்ட கண்டன்.

(8)

2640. இலங்கிய தெவ்வொளி யவ்வொளி யீசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே யொருங்குகின் றானே.

(ப. இ.) இயற்கையாய் என்றும் பொன்றாததாய் விளங்கும் உண்மை அறிவு இன்பப் பேரொளி எது? அதுவே சிவபெருமானின் அழிவில் பேரொளியாகும். அவ்வொளியின் அருட்கதிராய் நின்று ஒளிர்வது அருள் அறிவுப் பேராற்றலாகும். உளங்கொளியாவது அருள் நிறை ஆருயிராகும். விளங்குகின்ற இம்மூன்று ஒளியுமாக விரிந்த சுடரையுடைய சிவபெருமான் தோன்றி ஒளிக்குள்ளொளியாய் ஒருங்கி உடனின்றருள்கின்றனன்.

(அ. சி.) தூங்கு - நிலைபெற்று. விளங்கு ஒளி மூன்று - சிவ ஒளி - அருட்சத்தி ஒளி - ஆன்ம ஒளி.

(9)

2641. உளங்கொளி யாவதென் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாநின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி யாயத்து ளாகிநின் றானே.

(ப. இ.) உள்ளங்கொள்ளும் ஒளியாக நிற்பது ஆருயிர். அவ்வுயிர்க்கு உயிராய் ஒளிக்கு ஒளியாய் விளங்குவது வளப்பமிக்க சிவனொளி. அவ் வொளி மாமணிச் சோதியாகும். விளக்கமிக்க ஒளியாக மின்னி விளங்கும் தூய அறிவு விண்ணில் ஒடுங்கும். ஒடுங்கி வளம்பெற வழங்கும் ஒளிக்கதிர்க் கூட்டத்துள் நின்றருளினன் சிவன்.

(10)

2642. விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்
களங்கிருள் நட்டமே கண்ணுத லாட
விளங்கொளி யுன்மனத் தொன்றிநின் றானே.