நஞ்சினை மன்றாடிக்கேட்டுக்கொண்டதற்கு இரங்கிப் பொறுத்தலாகிய உண்டலைச் செய்தவன் சிவபெருமான். அதனால் அவன் மேலோனாயினன். நஞ்சுண்டவன் என்பது பிழைபொறுத்தவன் என்பதாம். செந்நெறிச் செல்வர், செம்பொருட்டுணிவினர், சித்தாந்தச் சைவர் தக்காராவர். அவர்கள் அருளால் உரைத்தருளும் நன்னெறிநான்மையே (2615) நற்றவ நெறியாகும். அந்நெறியே பயின்று ஒழுகினால் சிவகுருவினால் அருளப்பெறும் பொன்போன்றுயர்ந்த திருவைந்தெழுத்தின் அருமறை அடியுணர்வு கைகூடும். கைகூடவே ஒளி மிகுந்த மறைச் சிலம்பாகிய கழல்பூண்டுள்ள திருவடிசேர் திருவழி புலனாகும். அதனை நீங்கள் நாடுங்கள். நக்கார் கழல் - ஒளிமிகுந்த திருவடி. சிவபெருமான் சாவாமூவாத் தனிமுதற் பொருளென்றும் திருமால் உள்ளிட்ட தேவர் செத்துச் செத்துப் பிறக்கும் உயிரினங்கள் என்றும் உண்மை தெளிவிப்பதே சிவன் நஞ்சுண்டும் சாகாமையும், விண்ணவர்கள் அமுதுண்டும் இறந்தமையும் ஆகும். இவ்வுண்மை சிலப்பதிகாரத்துக்கண் இளங்கோவடிகள் வேட்டுவவரியில் சாலினி வாய்மொழியாகச் சாற்றுவது காண்க: "துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய் விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்." (12. 21 - 4.) மேலும் திருநாவுக்கரசு நாயனாரருளிய திருமுறைத்திருப் பாட்டும் இவ் வுண்மையினை அருளுவது காண்க : "வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் தன்னை யோதாதே வேத முணர்ந்தான் தன்னை அப்புறுத்த கடனஞ்சம் உண்டான் தன்னை அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை அப்புறுத்த நீரகத்தே அழலா னானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே." (6. 26 - 2.) (அ. சி.) மிக்கார் - தன்னையொழித்து மிகுந்துள்ளவர். பொன்னுரை - பொன்போலும் அருமையான உபதேசம். நக்கார் - நக்கன், சிவன். (5) 2773. விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலு 1மாமே. (ப. இ.) திருவருளால் ஆருயிர் அறிவொளியாய் உள்ளத்தின்கண் விளங்குவது. அதனால் அவ்வொளியினை உடல் உறுப்பு முதலிய தத்துவக்
1. உடம்பெனும். அப்பர், 4. 75 - 4. " இல்லக. " 4. 11 - 8.
|