120
 

யாமறிவோ மென்பர் பிறப்பும் இறப்பும் இல்லாப் பெரும் பொருள் நந்தியெங் கடவுள். அவன் பாலுள்ள இன்பத்தினை அன்புவிளையுமிடத்தே வழிபட்டுப் பெறுதல் முடியும். அத்தகைய வழிபாட்டு அன்பில்லாதார் அவனைக் காணமாட்டார்.

(8)

275. ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே.

(ப. இ.) இரவு பகலாக இடையறாது மறப்பும் நினைப்புமின்றி மறவா நினைவாய்ச் சிவபெருமானைத் தொழுதல் வேண்டும். அவனைத் திருவைந்தெழுத்து முறையான் ஆருயிர்கள் பேரன்புக் காதலாகிய பாசத்துள் வைத்து நேசிப்பர். அங்ஙனம் நேசிப்பவர்களே பற்றுடையவர்கள் எனப்படும் பத்தியினராவர். இத்தகைய பத்திமையுடையாரை அச் சிவன் சிறப்பாக அறிந்தருள்கின்றனன். அவர் தேசுறுதலாகிய திருவடியுணர்வாம் சிவஞானத்தால் அச்சிவனுக்கு அடிமையாம் தம் நிலையுணர்ந்து தம்மாற் செய்யப்படும் செயலெல்லாம் சிவச் செயலென்றிருப்பர். அப்படிக்கு இருந்தால் அம் மெய்யடியாருடன் அச் சிவபெருமான் கலந்து பிரிப்பின்றி மேலோங்கி நின்றருள்வன். பாசம் - அன்பு. பரிவு - பத்தி; பற்று. ஈட்டி நின்றான் - கலந்து நின்றான்.

(அ. சி.) தேசு - சிவஞானம்.

(9)

276. விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டுமென் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன1 மாமே.

(ப. இ.) திருவாதிரை செவ்வொளியுள்ள நுண்மீன். அதுபோல் திருக்கார்த்திகையும் செவ்வொளியுடையதொரு செம்மீன். இவ் விரண்டு நாட்களும் சிவபெருமானின் தனிச்சிறப்பு நாட்களாகும். திருக்கார்த்திகைத் திருநாள் சிவபெருமான் பேரொளிப் பிழம்பாய்த் தேன்றியருளிய திருநாள். இப் பிழம்பே ஒருபுடை யொப்பாக உரு அருவத் திருமேனியைக் குறிக்கும். உருவத் திருமேனி கட்புலன் ஆவதுமட்டு மல்லாமல் கையால் தீண்டுவதற்கும் வாய்ப் புடையதாகும். அது நிலத்தையும் நீரையும் கண்ணாற் காண்பதுடன் கையால் தீண்டவும் செய்கின்றோம். ஆனால் நெருப்பினைக் காண்பதல்லாமல் கையால் தீண்ட முடியாது. தீண்ட முடியாமைபற்றி அருவுருவெனச் செப்பலுமாம். இவ்வரு உருவத் திருமேனியினின்று உருவாக முதற்கண் தோன்றிய திருவுரு கூத்தப் பெருமானார் திருவுருவே. அஃதொன்றே திருவருள் மேலீட்டால் இடையீடின்றி இயற்றியருளும் எழின்மிக்க திருத்தொழில்கள் ஐந்தினுக்கும் உரிய திருமேனியாகும். அத்திருமேனியைக் குறிக்குந் திருநாள் திருவாதிரையாகும். இந்நாளே உலகத் தோற்றத்தின் பொன்னாளாகும். இம்முறைமை கார்த்திகை மார்கழி என்ற மாதங்களிரண்டும் அடுத்தடுத்துத் தொடர்ந்து வழங்கப்படுகின்றமையானும்


1. மறவாமை. 12. வாயிலார், 8.