1219
 

உள்ளத்தினால் தள்ளரிய அடிமையாய்ப் புணர்ந்துகொண்டேன். புந்தி - உள்ளம்.

(அ. சி.) நடு உட்டெரு - சித்தத்தின் மத்தியில், அஃதாவது உள்ளத்தில். சந்தி - சமாதி; யோகமும் சமாதியும்.

(12)

2908. விதறு படாவண்ணம் வேறிருந் தாய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

(ப. இ.) திருவருள் நினைவால் சோர்வுண்டாகாமல் தனித்திருந்து ஆராய்தல்வேண்டும். பழமறையாகிய 'சிவசிவ' என்னும் (2550) செந்தமிழ்த் திருமறையினை உணர்விற்கணித்து ஓவாவுறுதியுடன் நிற்றல்வேண்டும். இவ்விரண்டும் முறையே கைகூடினால் நம்மை மயக்கிக் கட்டுறுத்துக் கதறவைக்கும் பாழாகிய மாயை அடங்கியொடுங்கும். மாயை அடங்கி யொடுங்கவே, அப்பாற்பட்ட கற்பனைக்கு எட்டாத நனிமிகு வியப்பாய்த் தனிநிலைப் பொருளாய்த் தோன்றும் முழுமுதற் சிவத்தில் ஒடுங்குகின்றேன்.

(அ. சி.) விதறு - சோர்வு. வேறிருந்து - தனித்திருந்து. பதறுபடாது - பதையாது. கதறிய பாழ் - ஓட்டெடுக்கும் மாயை. அந்தக் கற்.........பாழில் - சிவத்தில்.

(13)

2909. வாடா மலர்புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறு மின்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே.

(ப. இ.) சிவவுலகினர் நறுமனம் கமழும் வாடாமாலையினைக் கொண்டு நாடொறும் முக்கணப்பனாம் சிவபெருமான் திருவடியிணையினைத் தொழுவர். அத்தகைய சேவடியினையுடைய சிவனை மனத்தால் ஓவாது உன்னி உழைத்தல்வேண்டும். அங்ஙனம் உழைப்பார் அறநெறியினைக் கூடுவர்; ஏனையார் கூடார் ஆருயிர்கள் நாடொறும் நிறையின்பம் முறையுற எய்துதற்பொருட்டுச் சிவபெருமான் அழகிய தாமரை மலரை யொத்த அவ்வுயிர்களின் நெஞ்சகத்தினுள் செழுஞ்சுடராய்ச் சென்று திகழ்கின்றனன். ஒன்றிய பெருஞ்சுடராய் நின்றும் அதனை இனிமையுற நாடார். அதனால் அவன் திருவடித் தேனமிழ்தினைத் தினைத்தனையும் நாடார்.

(அ. சி.) வாடா.........ஆனவர் - பரமசிவம். கூடார் - தம்மை அடையாதவர். கேடார் கமலம் - உள்ளக் கமலம். நாடார் - விரும்பார்.

(14)

2910. அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரு மன்றே.