தோன்றும். இது 'புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித் திகழ்ந்த வான்சுதையும் போக்கிச் சிறப்புடையத் தீபம் ஏற்றி' விளங்குந் திருமனையின் சிறப்பினை யொக்கும். சிவபெருமான் தூண்டாமணி விளக்காய் அவர்தம் உள்ளத்துப் பூண்டு நின்றருள்வன். (அ. சி.) மாறெதிர் வானவர் தானவர் - மாறுபட்டுள தேவர்களும் அசுரர்களும் கூறுதல். செய்து - துதித்து. ஊறுவர் - இன்பப் பெருக்குடையவர். வேறுசெய்து - ஊன் உயிர் வேறுபாடு செய்து; "ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே." சுந்தரர். (34) 2974. விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன் கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன் பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன் எண்ணிலா னந்தமும் எங்கள் பிரானன்றே. (ப. இ.) சிவபெருமான் 'உலகமே உருவமாகக்' கொண்டு இடைவெளி ஒருசிறிதுமின்றி எங்கணும் நிறைந்துள்ள திருமேனியையுடையவன். 'கண்முதற் புலனாற் காட்சிக்கும்' அப்பாற்பட்டவன். ஆனால் அவன் திருவடியுணர்வால் கண்டு மீண்டுவாராவழி பூண்டு பேரின்பம் எய்தும் பெருங் காட்சிக்குப் புலனாம் தன்மையும் உள்ளவன். காட்சி - அறிவு. நம் உள்ளப் பண்பால் கொள்ளத்தகும் பான்மைப் பயனுடையவனல்லன். உணர்வினுக்கு உணர்வாய் உண்ணின்று எண்ணில்லாத பேரின்பப் பெருவாழ்வைத் துய்ப்பிக்கும் பான்மைப் பண்ணவன். அவனே நம்முடைய பெருமானாவன். (35) 2975. உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல் நித்திலச் சோதியின் நிலக் கருமையன் எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச் சித்தர் அமரர்கள் தேர்ந்தறி 1யாரன்றே (ப. இ.) 'சார்ந்தாரைக் காக்கும்' தலைமைப்பாடுடைய தனி முதல்வன் சிவபெருமான். யாண்டும் எல்லாரும் வேண்டி உகக்கும் பேரின்பப் பெருங்கடலும் அவனே. தெண்ணீர் வண்ணமுத்தின் தண்ணளிசேர் பேரொளியுடையவன் சிவன். திருநீலகண்டப் பெருமை சேர் கருமையனும் அவனே. அவன் திருவடியிணையினை அவன் திருவருளால் தொழுதலே அமைவுடைத்து. அங்ஙனமின்றித் தம்முனைப்பால் சித்தரும் அமரரும் எத்தனை காலமும் எண்ணாநிற்பர். அங்ஙனம் எண்ணினும் அச் சிவபெருமானாகிய ஈசனை உள்ளவாறு ஆய்ந்தறியார். அவன் "சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி" என்னும் சொல்லரும் திருமுறைப் பண்பின் தொடர்பினன். அதனால் அவனை அவன் திருவடியுணர்வாலேயே காணுதல்வேண்டும். (அ. சி.) பெருங்கடல் - ஆனந்தக்கடல் போன்றவன். நீலக்கருமையன் - நீலமிடற்றன். (36)
1. உத்தம. 8. திருச்சதகம், 3. " கேழல. அப்பர், 4. 108 - 9.
|