1264
 

முழுமுதற் சார்புத் தன்மையினால் சாரப்படும் காரியப்பாடுகள் அனைத்துடனும் ஒருங்குடன் கூடி உறையும் ஒப்பில்லாதவன். அவன் யாண்டும் எவற்றையும் விட்டு நீங்கும் நிலைமையனல்லன். பிறப்பிலன். எல்லாவற்றையும் இறைந்தியக்கி ஆளும் ஆண்டானுமாவன். தன்பொருட்டு ஒன்றும் வேண்டாது ஆருயிர்களின் பொருட்டே அனைத்தும் வேண்டி அவற்றுடன்கலந்து விளங்கிநிற்கும் அம்மானும் அவனே. இவ்வாறே ஏழுலகங்களுடனும் கலந்துநின்றருள்பவன் சிவன்.

(அ. சி.) ஒழிந்தனனாயும் - ஒன்றும் ஆகாதவனாயிருந்தும். ஒருங்குடன் கூடும் - எல்லாவற்றோடும் கூடியிருப்பன். கழிந்திலன்-நீங்கான். ஒழிந்திலகு - தனக்கெனப் பொருள் இன்றி விளங்கும்.

(9)

2991. புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமு மாகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் 1றானே.

(ப. இ.) சிவபெருமான் இயற்கையுணர்வும் முற்றுணர்வும் ஒருங்குடையவன். அதனால் செயற்கைப் புலமையின் நாற்றமும் இல்லாதவன். அவன் புண்ணியவடிவினன். அவனே எந்தையாவன். நன்மைப் பாடமைந்த மெய்யுணர்வு வடிவினன். ஆருயிர்களை விட்டுநீங்காப் பெரு வழக்குள்ளவனும் அவனே. வேதியர் தாங்கற்ற வேதங்களைக் கூறிவிற்கின்றனர். அதனால் அச் சிவபெருமான் அவர்கள்பால் பாலின் நெய் போல் மறைந்து பரந்துநிற்கின்றனன்.

(அ. சி.) புலமை.......புண்ணியன் - செயற்கை அறிவு சிறிதும் இல்லாத புண்ணியன். நலமை.......பலமையில் - நன்மையைத் தாராத ஞானாப்பியாசத்தைக் காசு கொடுப்பவருக்கு விற்கும் ஆரிய வேதத்தை ஓதும் வேதியர் கூறும் பல பொருள்களில் ஒன்றிலும் சேராதவன்.

(10)

2992. விண்ணவ னாயுல கேழுக்கு மேலுளன்
மணணவ னாய்வலஞ் சூழ்கடல் ஏழுக்குந்
தண்ணவ னாயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் 2றானன்றே.

(ப. இ.) சிவபெருமான் தூய விண்ணின்கண் உறைபவனாய் ஏழுலகங்களுக்கும் அப்பாலுள்ளான். மண்ணுலகத்துள் உறைபவனாய் கடல் ஏழுக்கும் இப்பாலுள்ளான். அவன் 'அறவாழியந்தணன்' ஆதலின் மிக்க தண்ணளியை உடையவன். தண்ணளி - திருவருட்குளிர்ச்சி. இதுவே அவனுக்குரிய என்றும் பொன்றாவியற்கைத் தன்மையாகும். அவனே ஆருயிர்கட்குக் கண்போன்ற நனிமிகு பெருமையை உடையவன். அவன் அனைத்துயிருடனும் அனைத்துலகுடனும் பிரிப்பின்றிக் கலந்து நிற்கும் பேரருட் பெருமையன்.

(அ. சி.) கண்ணவனாகி - பெருமையுடையவனாய்.

(11)


1. வேத. அப்பர், 5. 99 - 4.

2. ஊனவனை. " 6. 69 - 9.