தினையும் இடையறாது பயின்று அவையே தாமாக விளங்கினார். இவ்வுண்மையினைக் கல்லா மனிதரே கயவர் எனப்படுவர். அவர்கள் இறந்தும் பிறந்தும் இருவினைக் கீடாகத் திருவாணையால் வரும் வினைத்துயரினைத் துய்ப்பதாகிய போகத்து உழந்தவராவர். வல்லார் - பிறப்பற முயலும் அறவோர். வினைத்துயர் - வினை நுகர்வுத் துன்பம். (5) 302. விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்று எண்ணி எழுதி1 இளைத்துவிட் டாரே. (ப. இ.) அருள் வெளியினுள்ளே விளைந்த பண்பால் விளாம் பழத்துடன் ஒருபுடை ஒப்புமை கூறற்கு ஏற்றவன் சிவபெருமான். அவன் புறக்கண்ணினுக்குச் சார்பு வாயிலாக அளிக்கும் பொதுக்காட்சியுடையன். அகக்கண்ணாகிய உணர்வினிடத்து இயற்கை உண்மை, அறிவு இன்ப வடிவாம் சார்பிலாத் தன் தன்மைவாயிலாக அளிக்கும் சிறப்புக் காட்சியும் உடையன். இவற்றை அளித்துக் கலந்திருந்தருள்வன். இவ் வுண்மையினை உள்ளவாறு அருளால் உணர்தல் வேண்டும். உணராதார் உலகத்தில் சுட்டி அறியப்படும் பொருள்களை நிலைக்குமென மாறுபடக் கொள்வர். மதித்து அதன் வாயிலாத் தம் அறிவு போனவாறு முன்னொடுபின் முரணாய்ப் பொருந்தா நூல்கள் பல செய்வர். செய்து கையும் கண்ணும் கருத்தும் இளைத்து ஏமங்காணாது வாளாபோயொழிந்தார் பலராவர். விளங்கனி என்பது பண்புவம ஆகுபெயராய்ச் சிவபெருமானைக் குறித்து நின்றது. வில்வம் கூவிளம் கிளுவை விளா, வன்னி ஆகிய ஐந்தும் சிவபெருமானுக்கு உவந்த ஐந்தளிர்கள் என்ப. அவற்றுள் வில்வப் பழமும் விளாம்பழமும் சிறந்த மருந்தாவதுடன் பித்தத்தை உடனே அகற்றும் மருந்துமாய்ப் பொருந்தும் உணவுமாய் விளங்குகின்றன. பித்தம் அகன்றால் அறிவு விளங்கி நல்லவராவர். அத்தகைய விளங்கனி சிவனைத் தொழுவார் அறியாமை நீங்கிப் பேரறிவோங்கி நல்லவராதற்குப் பண்பால் ஒருபுடை யொப்பாகும். விண் - அருள்வெளி. எழுதி என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. (அ. சி.) விளங்கனி - சிவம். (6) 303. கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்குங் கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.2 (ப. இ.) என்றுமுள்ள அழியாத் தொன்மையவாம் என்பது தொகை. இறை யுயிர் தளை என்பன வகை. சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு என்பனவற்றைத் தனித்தனியே முதலெழுத்தாற் குறிக்கும் 'சிவயநம' என்பது விரி. இவ்வகையாகப் பொருளுண்மை
1. விரிவிலா. அப்பர், 4. 60 - 9. 2. எவ்வடிவு - பாதகங்கள் உண்மை நெறி விளக்கம், 3 - 6. " நற்றா. மூதுரை, 24.
|