(ப. இ.) மனம் அருவுடற்கண் நின்று புறத்துப் பொறியிற் பொருந்தலும் அகத்திற் கரணத்திற் பொருந்தலும் புரியும். அதனால் அது பொருந்துமனம் எனப்பட்டது. அத்தகைய மனம் எங்குண்டு அங்கெல்லாம் உயிர்ப்புப் புடைபெயர்ச்சியும் உண்டு. மனத்தின் அசைவு இல்லாத இடத்து உயிர்ப்பின் அசைவும் இல்லை. சிவபெருமான் திருவடியைப்பற்றுமனம் அசைவின்றி நிலைபெற்ற மனமாகும். அந் நினைவுடன் மகிழ்ந்திருப்பார்க்குச் சிவபெருமானும் அம் மனம் ஒடுங்கும் இடமாகத் தன் திருவடியை அருள்வன். அருவுடல் - நுண்ணுடல். வாயும் - உயிர்மூச்சும். மன்மனத்துள்ளே - சிவனை மறவாமனம். மனோலயம் - மனமொடுங்குமிடம் (திருவடி). (அ. சி.) மன்மனம் - மன்னும் மனம்; தூலசூக்கும சரீரங்கள் இரண்டினும் பொருந்தும் மனம். (3) 601. விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங் கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள் செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை கொண்டு குதிரை குசைசெறுத் தாரே. (ப. இ.) மலையும் விரிந்தஅலரும் சேர்ந்துள்ள பெரிய கூபம் போலும் திருவருள் விளக்கத்தும், எல்லையில்லாத. பெருவெளியும் கண்டு அவையே மெய்யுணர்வாகக் கருதியிருப்பார்க்கு உயிர்ப்புப் புறப்பட்டுச்சென்று புருவநடுவின் உச்சியில் நிற்கும். ஆங்குக் கடிவாளத்தை இழுத்துக் கட்டுவதுபோல் அங்கேயே நிற்கச்செய்வன். விண்டு - மலை. அலர் - விரிவான. கூபம் - கிணறு; வற்றாத் திருவருள்ஊற்று. விஞ்சு - மிகுதியாகிய. அத்து - அழகு. வெளி பேரருள்வெளி. செழுங்கிரி - புருவநடுமுனை; ஆக்கினையினுச்சி. குசைச்செறுத்தார் - கடிவாளத்தை இழுத்துக் கட்டினார். (4) 602. மூல நாடி முகட்டல குச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் மேலை வாசல் வெளியுறக் கண்டபின் காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.1 (ப. இ.) மூலாதாரத்திலுள்ள நடுநாடியில் முக்கட்டு உண்டாம். விரிவான புருவநடுவின் உச்சியில் கண் நாக்கு மூக்குச் செவி என்னும் நான்கு வாயில்களும் ஒன்றுகூடும். அவற்றின் நடுவுள் திருவருள் நினைவுடன் இருப்பீர்களாயின் உச்சித்துளை வாயிலை வெளியுறக் காண்பீர்கள். அம் மேலைவாசலை வெளியுறக் கண்டவன் கனவிலும் காலன் வருவான் என்னும் நினைவு உண்டாகாது. சிவவொளிமுன் ஆணவவல்லிருள் மூளாமை இதற்கொப்பாகும். முக்கட்டு - படைப்போன் காப்போன் துடைப்போன் ஆகிய மூவரின் சுடர்உருவி. இவற்றை முறையே பிரமக்கிராந்தி, விட்டுணுக்கிராந்தி, உருத்திரக்கிராந்தி என்ப. இப்படிப் பாடங்கொள்வாரும் உண்டு. மேலைவாசல் - உச்சித்துளை வழி எனலுமாம்.
1. துஞ்சும். அப்பர், 5. 93 - 8.
|