642. கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது மட்டிட்ட கன்னியர் 1மாதுடன் சேர்ந்தனர் 2தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப் பொட்டிட்டு நின்று பூரண மானதே. (ப. இ.) கட்டமைந்த தாமரை நாளத்தையொத்த நடுநாடி வழியாகச் செல்லும் உயிர்ப்புடன் உணர்வுசெல்லும். சென்றக்கால் ஒன்பதென்னும் அளவையினைக்கொண்ட திருவருளாற்றலுடன் கூடுவர். அவ்வாற்றல்களுடன் மேலேறிப் புருவ நடுவின்கட் செல்லுதல் வேண்டும். செல்லவே ஆங்குள்ள நிறைந்த தேனமிழ்து நுகர்ந்து இன்புறலாம். இதுவோர் நிறைவுமாகும். ஞாளம் - நாளம்; தண்டு. கன்னியர் - ஒன்பது திருவருளாற்றல்: சிவை, பண்ணவி, திருவருளறிவாற்றல், தொழிலாற்றல், அன்னை, ஆள்வி, துடைப்போள், காப்போள், படைப்போள். சிவை - சத்தி. பண்ணவி - விந்துசத்தி. அன்னை - மனோன்மனி. தளங்களினூடு - மூலநிலை முதலிய ஆறு நிலைகளின்வழி. பொட்டு - நெற்றிப் புருவநடு. (அ. சி.) ஒன்பது கன்னியர் - ஒன்பது சத்திகள். தளம் - ஆதாரம். (23) 643. பூரண சத்தி எழுமூன் றறையாக ஏரணி கன்னியர் எழுநூற்றைந் தாக்கினர் நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங் காரண மாகிக் கலந்து விரிந்ததே. (ப. இ.) முழுநிறை ஆற்றல் நிலைக்களத்தை இருபத்தோர் அறையாக்கினர். அவற்றுள் தங்குங்கன்னியர் அவற்றை எழுநூற்றைந் தாக்கினர். இக் கன்னியர் நாரணன் முதலாகச் சொல்லப்பெறும் ஐந்தொழிற் கடவுளருடனும் கலந்து அவர்களை இயக்கி எங்கும் விரிந்து நின்றனர். எழுமூன்று அறையாக - இருபத்தொரு வகுப்பாக. ஐவர்க்கும் - அன்னை அத்தன் (சதாசிவன்), ஆண்டான், அரன், அரி, அயன் ஆகிய ஐங்கடவுளர்க்கும். காரணமாகி தோற்றத் துணையாகி. கலந்து - ஒன்றாய்ப் பின்னி. விரிந்தது - உடனாய் இயக்கிற்று. (24) 644. விரிந்து குவிந்து 3விளைந்தஇம் மங்கை கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற் பரந்து குவிந்தது பார்முதற் பூதம் இரைந்தெழு வாயு விடத்தினில் 4ஒடுங்கே. (ப. இ.) திருவருளாற்றல் உலகுயிர்கட்குத் தாரகம் எனப்படும் மீநிறைவாய் இருப்பள். இந் நிலை உலகினை இயக்கும் நிலையாகும். இந் நிலையினும் அத் திருவருள் சிவனிடத்து வீழ்நிறைவாய் நிற்பள். அதனால் 'விரிந்தும் குவிந்தும் விளைந்த இம் மங்கை' எனப்படுவள். அவ்
1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2: 4 - 2. " அருந்தின்பத். " அளவை, 7. (பாடம்.) 2. கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய். 3. விரிந்தானைக். அப்பர், 6: 86 - 6. 4. ஓங்கே.
|