தல் - தியானித்தல். அவ்வாறு எண்ணும் உணர்வினால் மதியமிழ்து நடுநாடிவழியாக மேற்செல்லும். எனல் - எனக் கூறுக. இது 'பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல், மக்கட் பதடி எனல்' (குறள் - 196) என்பதனால் விளங்கும். (அ. சி.) உயிர்த் தேய்மதி - சீவனுக்கு அபரபக்கம். விந்து...போலிது - சாதாரணமாகச் செல்லும் வழியில் செல்வது விந்து. காமுறவு - ஆசையுறுதல். மூலத்தில் கட்டுண்ணும் - மூலாதாரத்தில் உள்ள வீணாத்தண்டின் ஊடே செல்லும். (27) 858. வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ் சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும் ஈறிலி னன்கலை யீரைந்தொ டேமதித் தாறுட் கலையுள் அகலுவா வாமே. (ப. இ.) சிறப்பாகத் தீயின் கலை ஆறுடனும் கீழ்ப் பகுதியிற் காணும் கலை நான்கும் தொடர்வுபட்டேநிற்கும். அழிவில்லாத ஞாயிற்றின்கலை பத்துடன் திங்களின் கலை அடங்கியேநிற்கும். அந்நாளே விரிந்த உவாநாளாகும். சூறு - கீழ்ப்புறம். இனன் - ஞாயிறு. மதித்தாறுள் - திங்களின் கலையுட்பட்டிருக்க. (28) 859. உணர்விந்து சோணி உறவினன் வீசும் புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில் உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே. (ப. இ.) உணர்விற்கு வாயிலாகிய ஒளிவிந்து, நாதமாகிய சோணி தத்து - நாதத்தின்கண் கலக்க ஞாயிற்றின் ஒளி மிக்குக் காணப்படும். ஞாயிற்றின் கதிர் குறையுமானால் விந்து மேலே விளங்கித் தோன்றும். ஒளியாகிய உடம்பும் உணர்வும் ஓரளவாகித் தோன்றின் அத்தகைய யோகியர்க்கு உடம்பு ஒரு காலத்தும் விட்டு நீங்காது. சோணி - சோணிதம்: நாதம். உவை - அவ்விரண்டும். (அ. சி.) சோணி - சோணிதம்; நாதம். இனன் - சூரியன். உவை - அவை இரண்டும். (29) 860. விடாத மனம்பவ னத்தொடு மேவி நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக் கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே. (ப. இ.) இடையறாத ஒடுக்கமனமும் உயிர்ப்பும் ஒன்றுகூடிப் பொருந்தி அனைத்தையும் என்றும் பிரிப்பின்றி இயைந்து இயக்கும் சிவபெருமானின் தனிப்பெரு மறையாம் 'சிவ' என்றும் அருளொலி முழக்கத்தை எழுப்பினால் கட்டுப்படாது முருட்டுத் தன்மையாய் இழுத்துச் செல்லும் ஐம்புலன்களும் கட்டுக்கு அடங்கும். விடுதலில்லாது என்றும் நிலைத்திருக்கும் திருவடியின்பம் துய்க்கும் தெவிட்டாத நிறை இன்பம்
|