407
 

(அ. சி.) முக்கூடம் - புருவமத்தி. ஆடிய ஐந்து - ஐந்தொழில்கள். பன்னீரிராசி - தேகத்தின்கண் உள்ள பன்னிரண்டு இராசித் தானங்கள் (இது நேபாள சுவாமிகள் வரைந்து அளித்த படத்தை நோக்க வெளியாம்).

(6)

997. நற்சுட ராகுஞ் சிரமுக வட்டமாங்
கைச்சுட ராகுங் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்புற் றிலிங்கமும்
நற்சுட ராயெழு நல்லதென் றாளே.

(ப. இ.) நல்ல அனற்சுடர் உச்சியும் முகமும் வட்டமாக அமைந்திருக்கும். அச் சுடரே கைமேல் பயன்தருதற்குரிய ஒன்றாகும். அதனை இடையறாது கருதுவார்க்கு, அழகிய உடம்பு அசைவற்று இருக்கும். அவ்வாறிருப்பார்க்குச் சிவலிங்கம் ஒளிப்பிழம்பாக விளங்கும்.

(அ. சி.) சிரமுகவட்டம் - புருவமத்தி (இதுதான் சிற்றம்பலம்) கருத்துற்ற கை - தியானிப்பவர் கையில்.

(7)

998. நல்லதென் றாளே நமக்குற்ற நாயகஞ்
சொல்லதென் றாளே சுடர்முடிப் பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் றாளையுங் கற்றும்வின் னாளே.

(ப. இ.) நம் உயிருக்கு உயிராக விளங்கும் திருவருள் அம்மை அனலோம்பும் முறைமை நல்லதென்றருளினள். திருவைந்தெழுத்துமே அருமறையாகிய உபதேசம் என்றருளினள். அவளே திருவடி நிலையாக மென்மையுற்று நின்றனள். அவ்வம்மையின் உண்மைத் தன்மையை உணராதவர் கலைகளையும் அதற்கு அடியாகிய மறைகளையும் உணர்ந்தவராயினும் 'கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்' ஆதலால் அம்மையும் வேறாகவே நிற்பள். நாயகம் - அம்மை. சொல் - உபதேசம். கல் - கலை. தாள் - அடியான மறை. வின்னாள் - வேறானவள்.

(அ. சி.) நாயகம் - தேவி. மெல்ல நின்றாள் - திருவருட் சத்தி.

(8)

999. வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டுஞ் சுடர்நாகந் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

(ப. இ.) ஒளியையே நாவாகவுடைய இளம்பிறைபோல் அமையப் பெற்ற அனற்குண்டத்துச் சிறப்பித்துச் சொல்லப்படும் சிவனும் சிவையும் எல்லாத் திசைகளிலும் சுடர்விட்டு விளங்குவர். முதுகந்தண்டாகிய மேருவினிடத்தில் அச் சிவச்சுடர் பல்வகையாகத் தோன்றும். அச் சுடர் ஆருயிரின் அகத்து நிலைகொண்டு விளங்கும். வில் - ஒளி. இரண்டும் - சிவனும் சிவையும். சிவை - சத்தி. நாகம் - மேரு.

(அ. சி.) இரண்டும் - சத்தியும் சிவமும்.

(9)