திருவடிப் பேரின்பத்து நல்லாரைக் கூட்டுவிக்கும் சிவமங்கை. எங்கும் பொருந்தி உரிமை பூண்டருளும் முதல்வி. இவளே ஆருயிர்களின் வினையை அகற்றினள். .(அ. சி.) ஆவின் கிழத்தி - உயிர்களின் தலைவி. நாவின் கிழத்தி - வாணி. தேவின் கிழத்தி - சதாசிவ பத்தினி. (48) 1099 .வினைகடிந் தாருள்ளத் துள்ளொளி மேவித் தனையடைந் தோர்க்கெல்லாந் தத்துவ மாய்நிற்பள் எனையடி மைகொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியு மாமே.1 (ப. இ.) இருள்சேர் இருவினையும் சேராத நல்லார் உள்ளத்து உணர்வொளியாய்த் திகழ்பவள் திருவருளம்மை. அவளே தன் திருவடியைத் தலைக்கூடினார்க்கெல்லாம் சென்றடையாத் திருவாகிய தத்துவமாக நிற்பள். அவளே எளியேனை அடிமை கொண்டருளிய திருவார் செல்வி. சதாசிவக் கடவுளாகிய அருளோனையும் ஈன்றவள். அவ்வருளோனைக் கணவனாகக் கொண்டவள். அத்தகைய அம்மை தொன்மையளாவள். தொன்மை - அனாதி (அ. சி.) கண மே - தன் கணவனாகிய சதாசிவம் முதல் ஐவரைப் பெற்றதால் அநாதியும் ஆவள். (49) 1100 .ஆதி அனாதி அகாரணி காரணி வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற சோதித் தனிச்சுடர் சொரூப மாய்நிற்கும் பாதி பராபரை பன்னிரண் டாதியே. (ப. இ.) அம்மை தொடக்கமும் தொன்மையும் தனக்கோர் காரணமுமில்லாதவளும் தான் எல்லாவற்றுக்குங் காரணமாயுள்ளவளுமாவள். அறவோர் பொருட்டு அறநூலை ஆய்ந்தருளினள். நிலைபெற்று நிற்கும் ஒப்பிலாப் பேரொளிச்சுடராய் நிற்பவள். பன்னிரு கலையாகத் திகழும் சிவபெருமானுக்குப் பாதித் திருமேனியாகவுடையவள். அவளே நடப்பாற்றலாகிய ஆதியாவள். வேதம் - அறநூல். வேதியர் - அறவோர். (அ. சி.) பன்னிரண்டு - ஆதாரம் 6, நிராதாரம் 6 ஆக 12. (50)
1. மின்னிடைச். 8. திருப்பொற்சுண்ணம், 13. " தவளத்த. 8. திருக்கோவையார், 112.
|