484
 

நெஞ்சமே நீயும் உணர்ந்து அன்பு பூண்டு அங்ஙனம் வழிபடுவாயாக. அற்கொடி: அல் + கொடி - கரியகொடி.

(அ. சி.) மாதர் - பரிவார சத்திகள். அற்கொடி - கரிய கொடி போன்ற. விற்கொடி - ஒளி பொருந்திய சத்தி.

(91)

1222. விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொ ளிலம்பியம் ஒன்று தொடரே.

(ப. இ.) மிக்கு விளங்குகின்ற ஒளியோடுகூடிய மலர்மாலையும், விரிசுடர்வாய்ந்த மணிமாலையும் விளங்கும் பராசத்தி, 'மாக்கள் சிந்தையுள் சார்ந்துநின்ற, பொங்கிய இருளைப்போக்'கத் திருநீலகண்டம் விளங்குகின்ற சிவபெருமானுடன் மனத்தே காம விளையாட்டுக் கொள்கையில்லாத தோணித்தன்மை ஒத்த புணையாவள். அவள் திருவடியைத் தொடர்ந்து வழிபடுவாயாக அம்பியம்-தோணித் தன்மை. அம்பி - தோணி.

(அ. சி.) தூங்கிருள் - நிலைபெற்ற ஆணவம். இலம்பியம் - உபதேசமொழி.

(92)

1223. தொடங்கி உலகினிற் சோதி மணாளன்
அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி யுமையொடும் ஓருரு வாமே.1

(ப. இ.) உலகினில் ஒளியினைத் தொடங்குவித்து அதற்கும் ஒளிகொடுத்து விளங்கும் சிவபெருமான் திருவருளின்கண் அடங்கியிருப்பது ஏன்? அதுதான் பேரன்பாகிய காதலின் பெருமை பரந்த அடர்ந்த பெருஞ்சடைமேல் வருகின்ற கங்கையாள் நடப்பாகிய மறைப்பாற்றலாவள். அவள் உமையாள் என்னும் வனப்பாகிய உறைப்பாற்றலின்கண் ஒடுங்குவள். ஆதலால் கங்கையும் உமையும் காணில் ஒருவளே. இவ்வுண்மை அப்பரருளிய 'செறி கழலும் திருவடியும்' என்னும் திருத்தாண்டகத்தினுள் 'மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்' என்பதனால் விளங்கும். மலைமகள் - பராசத்தி. சலமகள் - திரோதானசத்தி. சலம் : வஞ்சனை; மறைப்பு. விடங்கொள் - இடங்கொள்; பரந்த.

(93)

1224. உருவம் பலவுயி ராய்வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடிற்
புரிவளைக் கைச்சியெம் பொன்னணி மாதை2
மருவி இறைவன் மகிழ்வன மாயமே.


1. செறிகழலும், மலைமகளைப். அப்பர், 6. 18 - 8, 72 - 2.

" வங்கமலி. அப்பர், 4. 104 - 8.

" இனையபல - சிவப்பிரகாசம், 2 - 30.

2. எங்குமுளன். சிவஞானபோதம், 2. 4 - 1.