494
 

1254. விரிந்தது விந்துவுங் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவினில்
விரிந்தது வுட்கட்ட எட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விரையது வாமே.

(ப. இ.) விந்து விரிந்த காலத்து வித்தாகிய பீசம் மறையும். அவ் விந்துவும் நாதத்தளவினில் விரியும் உள்ளே அடங்கும் உயிர்ப்பு அறுபத்து நான்கு மாத்திரையாகும். அவ்வாறு விரிந்த விந்து, அனைத்துலகுக்கும் வித்துமாகும்.

(24)

1255. விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தாளே.

(ப. இ.) தோன்றிய உலகங்கள் அனைத்தும் விந்து என்னும் காரணத்தின் உண்டாவன. விந்துவால் விளைந்த உடலகத்து உயிரையும் சிவன் சேர்த்து வைப்பன். விந்து காரணமாக இவை யெல்லாம் விளைந்தன என்ப. அவ் விந்து காரணமாக மேலான அறிவு உண்டாகும். மேலான அறிவு - மெய்யுணர்வு.

(25)

1256. விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்தது சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

(ப. இ.) எழுத்துக்களுக்கு முதலாக விளைந்தது விந்துவும் நாதமும். அப்படி விளைந்த எழுத்தாகிய விந்துவும் நாதமும் சக்கரமாகும். அவ் வெழுத்துக்களே உடம்பினகத்தும் நிற்கின்றன. அவ் வெழுத்துக்களே மந்திரமுமாகும். உடம்பினகத்து. ஆறு நிலைக்களங்களுள்.

(அ. சி.) மெய்யினில் - சரீரத்துக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்கள் உள்.

(26)

1257. மந்திரஞ் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாங்
கந்தரத் துள்ளு மிரேகையில் ஒன்றில்லை
பந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

(ப. இ.) தந்திரமாகிய வழிவகைகளால் அகத்தே எழுந்து தோன்றி வட்டவடிவமான எரி ஒன்று உண்டு. இதுவே மந்திர சக்கரமெனச் சொல்லப்படும். கழுத்தளவிலும் அகத்தே வரிவடிவின்றி ஒலிவடிவேயோம். இவற்றிற்கெல்லாம் முன்னாக ஓமொழி பிணிப்புள்ளதாகும். அதனை முதன்மையாகக் கொண்டு அகவழிபாடாகிய தியானத்தைப் புரிவாயாக கழுத்திடத்தை வெளிநிலை எனவும் கூறுவர்.