520
 

உள்ளம் கள்ளமின்றி நிலைபெற்று நிற்கும். நிற்கவே அவ் வுள்ளம் நினைப்பவை யனைத்தும் அருளால் வலிய வந்து முன்னிற்கும். திருவருள் ஆற்றல் உள்ளத்து நிலைபெற்று நிற்றலால், பார்க்குமிடமெல்லாம் திருவருட் பொலிவே காணப்படும். புருவநடுவின்கண் அளவிலாத் திருவருள் ஒளி காணப்படும்.

(அ. சி.) நின்றி...எல்லாம் - அண்டத்திலுள்ளவற்றை எல்லாம் பிண்டத்தில் காணலாம். நின்றிடும் உள்ளம் - மனம் நிலைபெறும். நின்றிடும் சத்தி நிலைபெற - என்றுமுள்ள சத்தி இதயத்தில் வீற்றிருக்க. கண்டிடம் நின்றிடும் - எங்கும் சத்தி மயமாய்த் தோன்றும். மேலை விளக்கொளி - புருவ மத்தியிலுள்ள தீபம் போன்ற சிவ சத்தி ஒளி.

(40)

1334. விளக்கொளி சௌமுத லௌவது ஈறா
விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே.

(ப. இ.) விளக்கொளி போன்று துணையாம் நவாக்கரி சக்கரம் சௌ முதல் ஒள ஈறாக வரையப்படுவதாகும். அதுவே மெய்ப் பொருளாம் சிவத்தை விளக்குவதாகும். எல்லாச் சக்கரத்திற்கும் உணவுக்கு இன்றியமையாது வேண்டப்படும் உயரிய உப்புப்போல் உயிர் மந்திரமாகவுள்ளது 'நமசிவய' என்பதே. ஏனை மந்திரங்களும் சக்கரத்தில் வரையும் எழுத்துக்களும் கைகூட வேண்டியவைகளைக் காதலுளம் கொள்ளக் கருதும் கருத்தின் குறியாகும். இஃது 'ஓதுசெயற் பாவுடலாம் உய்க்கு மறை யுயிராம், தீதில் நமசிவய செப்பு' என்பதனால் விளங்கும். நவாக்கரி சக்கரத்தில் விளங்கும் மின்கொடிபோன்று தோன்றும் திருவருளம்மையைக் காதலுள்ளத்தாற் காண்பர். கண்ட அப் பேற்றால் கண்ட அம் மெய்யன்பரும் உலகினுக்குத் திருவருள் ஒளி விளக்காய்த் திகழ்வர். மேலும் 'எல்லாச் செயற்கும் இயம்புமறை ஐந்தெழுத்தே, வல்ல சிவயநம வாழ்த்து' என்பதனையும் நினைவுகூர்க.

(அ. சி.) விளக்கொளிச் சக்கரம் - எல்லாவற்றையும் விளக்கும் நவாக்கரி சக்கரம்.

(41)

1335. விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

(ப. இ.) மேற்கூறிய நவாக்கரி சக்கரத்தினிடத்து விளங்கும் மெய்ப்பொருளாம் சிவத்தைக் கூறுங்கால், திகழும் அருளம்மையே அதுவாகும். சிவமெய்யாக என்றும் ஒருபடித்தாய் நிற்கும் மெய்யுணர்வுப் பொருளை விளங்கிக் கொண்டவர்கள், உலகத்துக்கு அப்பொருளை விளக்கும் முறைமைசேர் இறைபணியாளராவர். இறைபணியாளர்: அடிமையாய் நின்றுணர்வில் ஆண்டவருள் தூண்டப், படிமிசையாற்றும் பண்பினராவர். ஆசையற்று வீடும் வேண்டாவிறலின ரிவரே.

(அ. சி.) விளங்கிடுவார்கள் - விளக்கியிடுவார்கள் என்பது மெலிந்து வந்தது.

(42)