(ப. இ.) திருவருளம்மை பொன்முடியினையும் முத்துமாலையினையும் விழைந்தவள். நிறைந்த பவழமாலையும் செம்பட்டுடையும் பூண்டவள். அண்ணாந்து ஏந்திய வனமுலையின்கண் கச்சுப்பூண்டவள். ஆருயிர் இன்புற்றுய்ய மலர்ந்த திருமுகத்துடன் திகழ்ந்திருந்தனள். அவள்தம் திருமேனி பச்சை நிறமாகும். (அ. சி.) பச்சை - பச்சை நிறத்தி. (75) 1369. பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டு கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலாற் கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய் எச்ச விடைச்சி இனிதிருந் தாளே. (ப. இ.) பச்சைத் திருமேனியுடைய அம்மைக்குச் சூழ இருக்கும் பாங்கிமார் ஆறெட்டாகிய நாற்பத்தெண்மர். அணுக்கமாக இருக்கும் மழலை மொழித் தோழியர் எண்மர். இவர்களோடு கூடித் திருவுலாக் கொள்வள். இவ் விருதிறத்தினரும் இருபுறக் காவலராவர். இந்நிலையில் இளைத்தது போன்று காணப்படும் சிறிய இடையினையுடைய அம்மை இனிது வீற்றிருந்தனள். எச்ச - இளைத்த. இடைச்சி - இடையையுடையவள். இருகை - இருபுறம். எச்ச : எய்த்தலென்பதன் மரூஉ. (அ. சி.) பாங்கிமார் ஆறெட்டு - பரிவார சத்திகள் 48. கொச்சை யார் எண்மர் - தோழியர் 8. கையிரு - இருகை; இருபுறம். எச்ச இடைச்சி - சிற்றிடைச்சி. (76) 1370. தாளதி னுள்ளே தாங்கிய சோதியைக் காலது வாகக் கலந்துகொள் என்று மாலது வாக வழிபாடு செய்துநீ பாலது போலப் பரந்தெழு விண்ணிலே. (ப. இ.) திருவருளம்மை தாமரை நாளம் போலும் உச்சித் தொளையிலே விளங்கிக்கொண்டிருக்கும் திருவருட்சுடரை நடுநாடி உயிர்ப்புடன் கூடிச்சென்று வேறறக் கலந்து கொள்ளென்று அருளினள். திருவருள் அம்மையினிடத்துப் பேரன்பு பூண்டு வழிபாடு செய்வாயாக. கள்ளமில் உள்ளத்தால் அவ் வுள்ளம் பால்போலாகி, வெளியாகிய புருவ நடுவின்கண் அவ் வெளியுடன் நிறைந்திருப்பாயாக. (அ. சி.) தாள் - பிரமரந்திரம். கால் - பிராணவாயு. மால் - விருப்பம். பாலதுபோல - களங்கம் அற்று. விண் - புருவமத்தி. (77) 1371. விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக் கண்ணமர் கூபங் கலந்து வருதலாற் பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது தண்ணமர் கூபந் தழைத்தது காணுமே. (ப. இ.) புருவ நடுவின்கண் மதிமண்டலத்து அமிழ்தம் தங்கியுள்ளது. அது மந்திர உருவால் மேல்வயிறு நெஞ்சம் இவ் விரண்டற்கும்
|