(ப. இ.) உயிருக்கு உயிராகிய சிவபெருமான் அவ் வுயிரினிடமாக வெளிப்பட்டு விளங்கினால், பாடம் கைவரப்பெற்றோர்க்கு அப் பாடம் மீண்டும் படிக்க வேண்டாமை போலச் சிவனை அடைதற்காக ஓதும் ஓதல் முயற்சிகள் வேண்டாம் என்பதே ஓதுதலும் வேண்டாம் என்பது. மெய்யாகிய உடம்பின்கண் சிவபெருமான் உள்ளம் பெருங்கோவிலாகக் கொள்வோனாதலின் அதனைக் கோவிலாகக் கொண்டருளின பின்பு அதன்பொருட்டுச் செய்த தனிப்பெருங் காதலாகிய பத்தி முயற்சியும் வேண்டாம். இஃது அடிப்படை போட்டுக் கட்டிய வளமனையாகிய வீட்டிற்குப் பின் அடிப்படை முயற்சி வேண்டாமையை ஓக்கும். வேண்டாமை என்பது குறிப்பாக முற்றுப்பெற்றமையைப் புலப்படுத்தும். தான் அவனாதல் என்னும் சமாதி கைகூடினால் அழுந்தும் முயற்சியாகிய சாதலும் வேண்டாம். திருவருள் வலத்தால் தம்மை ஐந்துபுலனும் பின்செல்லும்படியாக ஒழுகும் ஒழுக்கத்தினார்க்கு இடம்பெயர்ந்து தவத்திற்குச் செல்லும் முயற்சிகள் வேண்டா. (அ. சி.) உயிர்க்குயிர் - சிவன். மெய்க்காயமிடங் கண்டால் - உடம்பினுள் உத்தமன் கோவில்கொண்டால். போதல் - தவமியற்ற வனம் முதலிய இடங்களுக்குப் போதல். (1) 1607. கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற் சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற் சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற் சித்தமும் வேண்டாஞ் செயலற் றிருக்கிலே. (ப. இ.) மெய்ந்நூற் பொருள்களின் உண்மைக் கருத்தறிந்து அடங்கினால், வெளிப்படையாக அச் சொற்றொடர்களை எடுத்தும் படுத்தும் கத்துதலாகிய முயற்சிகள் வேண்டா. சமாதி கைகூடினால் வேதம் ஓதுதலாகிய சத்தமும் வேண்டா. ஆணவத் தொடக்கற்றவர்க்கு வேறு துப்புரவுகள் வேண்டா. உயிர்ச் செயலற்று உடையான் செயலாக இருப்பின் ஒன்றைத் தூக்கி நாடுதலாகிய சித்தமும் வேண்டா. (அ. சி.) கருத்தறிந்து - உண்மைப் பொருளை அறிந்து. ஆறினால் - அடங்கினால். சத்தமும் - மந்திர உச்சாடனமும் ஆரவார பூசையும். தொடக்கு - பற்று. (2) 1608. விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார் விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. (ப. இ.) உடம்பெடுத்தபயன் உடம்பினுள் உடையானைக் கண்டு வழிபடுதல். இவ் வுண்மையினை யுணர்ந்தார் நன்னெறி நான்மைத்தவம் புரிவராவர். அதுபோல் மெய்யுரையாகிய குருமொழிகொள்வார் உடம்பின் பயன் உணர்ந்தோராவர். மெய்யறமாகிய சிவபுண்ணியஞ் செய்வாரும் உண்மை உணர்ந்தோரே. இவ் வுண்மையுணர்ந்தோர் விண்ணிலும் மண்ணிலும் வாழ்வார் அனைவரினும் மிக்கோராவர். (அ. சி.) விளைவு - உடம்பினால் ஆம் பயன். (3)
|