(ப. இ.) நற்றவத்தால் சிவத்தையுற்றவர்பால் செருக்குக்கொண்டு சினத்தலும், நட்பு உறவு கருதலும், பயன்கருதிச் செயல் செய்தலும், முனைத்துத் தின்றலும், சுவைத்தலும், தீமை செய்தலும், முறையின்றித் தாழ்த்தலும், உயர்த்தலும், தற்பெருமை கூறுதலும் ஆகிய நிகழ்ச்சிகள் மறந்தும் உண்டாகா. காரணம் என்ன என்றால், இவையொன்றும் வழி மறந்தும் உண்டாகா. காரணம் என்ன என்றால், இவையொன்றும் வழி படப்படும் சிவத்தின்பால் இயற்கையாகவே என்றும் இன்மையான் என்க. (அ. சி.) கன்றல் - கோபித்தல். பின்றல் - தாழ்ச்சி அடைதல். பிறங்கல் - மேன்மையை யடைதல். (7) 1659. விடிவ தறியார் வெளிகாண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார் கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கது வாமே. (ப. இ.) அக நிகழ்ச்சியாகச் சித்தம் சிவத்தினிடத்தில் மறவா விழிப்பாக நிற்பது விடியல் என்பதை யுணரார். அறிவுப்பெருவெளியையும் காணமாட்டார். அச்சமில்லாத அப் பெருவெளியில் நினைப்புக் கொள்ளவும் மாட்டார். காவலாக உள்நோக்கம் கொள்ளுதற்பொருட்டுக் கண்ணிமையை அடக்குமின். அகநோக்கிக் காண்மின். பிறவாற்றால் நீங்காத ஆணவவல்லிருளைத் தடுத்து நீக்கும் திருவடியுணர்வாகிய விளக்கு அவையாகும். (அ. சி.) விடிவது - சித்தத்தைச் சிவனிடம் வைப்பது. வெளி - ஞனம். வெடியில் - அச்சமில்லத. வெளியில் - பரம ஆகாயத்தில் விழிக்கவும் பார்வையைச் செலுத்தவும். கடி - இன்பத்துக்குக் காரணமாயுள்ள. உள் - உள்ளத்தை, மனத்தை. நிமை - கண் இமைப்பொழுது. விடியாமை - அஞ்ஞான இருள். காக்கும் - தடுக்கும். விளக்கதுவாம் - ஞானம் உண்டாம். (8) 1660. வைத்த பசுபாச மாற்று நெறிவைகிப் பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத் தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு பித்தான சீடனுக் கீயப் பெறாதானே. (ப. இ.) தொன்மையே அமைந்த பிணிப்பியாகிய பசுத்தன்மைக்குரிய ஆணவவல்லிருளை மாற்று நன்னெறியொழுகிக் கட்டற்று வீடுபெற்றுடையோனாகிப் பல்லாற்றானும் நிலலாவுலகியலின் நிலையா வாழ்க்கையில் மாறுதலுற்று, மெய்ப்பொருளை இடையறாது நினைந்து திருவடியில் தலைப்படுதல் நன்மாணாக்கனுக்குரிய நலங்களாகும். இந் நெறியில் வாராது உலகியல் மயக்கங்கொண்ட மாணவர்க்கு அருமறையாகிய உபதேசம் செய்தல் கூடாது. ஈதல்: ஈண்டு உபதேசம் செய்தல். (அ. சி.) வைத்த - அநாதியாய் உள்ள. பசுபாசம் - பசுத்துவத்துக்குக் காரணமான ஆணவம். பெத்தமற - பந்தம் நீங்க. பிறழ்வு உற்று - மாறுதலை அடைந்து. தத்துவம் முன்னி - மெய்பொருளைச் சிந்தித்து. தலைப்படாது - மேம்பாடு அடையாது. பித்தான மயங்கிய. ஈயப்பெறா உபதேசிக்கப்படா. (9)
|