1725. சத்தி சிவமாம் இலிங்கமே தாபரஞ் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமஞ் சத்தி சிவமாம் இலிங்கஞ் சதாசிவஞ் சத்தி சிவமாகுந் தாபரந் தானே. (ப. இ.) திருக்கோவில்களில் நிலைபெற்ற இலிங்கம் தாபர இலிங்கம். தாபரம் - நிலைப்பு அவ் விலிங்கம் சத்தியும் சிவமுமாகும். அடியாராகிய திருக்கோவில் சங்கமமாகும். சங்கமம் - இயங்குதல். மெய்யடியார் திருக்கோலங்களும் சத்தி சிவமாகும். சத்தி சிவம் இரண்டினையும் இணைத்து ஓதுங்கால், சதாசிவம் எனப்பெறும் தானே தனி முழுமுதல் சத்தி சிவம் இரண்டும் இணைந்த சதாசிவம் என்ப. (அ. சி.) தாபர இலிங்கம் - கோவில்களில் உள்ள அருவுருவத் திருமேனியான இலிங்கம். சங்கம லிங்கம் - அடியார். தாபரம் சத்தி சிவமாம். உலகமே சத்தி சிவ உருவங்களாம். (3) 1726. தானே ரெழுகின்ற சோதியைக் காணலாம் வானே ரெழுகின்ற ஐம்ப தமர்ந்திடம் பூநே ரெழுகின்ற பொற்கொடி தன்னுடன் தானே ரெழுகின்ற அகாரம தாமே. (ப. இ.) மூலத்திடத்து என்றும் அழகோடு தானாக எழுந்து ஒளி வீசுகின்ற சிவச்சுடரைக் காணலாம். தூய மாயையின் கூறாக அம் மூலத்திடத்து எழுகின்ற ஐம்பது எழுத்துக்களின் தொகையாகிய ஓங்காரமும் அம் மூலத்தேயாம். ஆயிரம் இதழ்த் தாமரையின் நிலைக்களமாகிய உச்சித்துளைமேல் சிவசத்தியுடன் சேர்ந்து விளங்குவது அகார முதல்வனாகிய சிவபெருமானாகும். (அ. சி.) தான் ஏர் எழுகின்ற சோதி என்றும் உள்ள இயற்கைச் சோதி. ஐம்பது அமர்ந்திடம் - 51 அக்கரங்களும் அடங்கிய பிரணவம். பூ நேர் எழுகின்ற பொற்கொடி - ஆயிரத்தெட் டிதழ்த் தாமரையில் (உச்சித் தாமரை) இருக்கின்ற மனோன்மணி. அகாரம் - சிவன்; "யாரும் அறியார் அகாரம் அவனென்று." (4) 1727. விந்துவும் நாதமும் மேவு மிலிங்கமாம் விந்துவ தேபீட நாத மிலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்த கருவைந்துஞ் செய்யு மவையைந்தே. (ப. இ.) ஒளியும் ஒலியும் ஆகிய விந்துநாதங்கள் பொருந்தும் சிவலிங்கம்; விந்து பீடமாகும்; நாதம் இலிங்கமாகும். இவ் விரண்டையும் சார்புக் கடவுளாகக் கொண்டு அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐம்பெரும் தெய்வநிலைகள் தோன்றின. இவ் வைந்தினையும் ஐந்தொழிற்கு வேண்டும் கருவென்ப. கரு - காரணம். இவ் ஐவரின் வாயிலாக ஐந்து தொழில்கள் நிகழ்கின்றன. அத் தொழில்கள் முறையே அருளல், மறைத்தல், துடைத்தல், காத்தல், படைத்தல் என்ப.
|