1908. பார்த்திட்டு 1வைத்துப் பரப்பற் றுருப்பெற்று வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும் மூப்புற்றே பின்னாளி லாமெல்லா 2முள்ளவே. (ப. இ.) மேலோதியபடி உய்த்துணர்ந்து பார்த்தபின் உலகியற்றொழில் பொருந்தாமல் வடிவம்பெற்று, கச்சினை வென்று பெருத்து வளர்ந்த முலையினையுடைய மடந்தையின் வயிற்றினின்றும் நீங்கி, கூடியிருந்து தந்தையின் வயிற்றில் விந்துவாய் விளைந்த இரு திங்களாகிய அறுபதுநாள் நீங்க, முந்நூறுநாள் தாயகட்டில் தங்கி வரினும் உலகினிடை வாழ்நாளில் எய்தும் 'பேறு, இழவு, இன்பம், பிணி, மூப்புச், சாக்காடு' என்னும் ஆறும் பின்னாளில் வருவனவாயினும் அன்றே உய்த்துணரும்படி அமைந்துள்ளன. (அ. சி.) வையத்துப் பரப்பு - உலக வியாபாரம். மூப்புற்று - கருமுதிர்ந்து. (9) 1909. வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை வித்தினில் வித்தை விதற வுணர்வரேல் மத்தி லிருந்ததோர் மாங்கனி யாமே. (ப. இ.) உலகிடைப் புறப்பொருளிலும் வித்திடுவோர்க்கல்லாமல் விளைவு வருவதில்லை. வித்திடுவோர்க்கே சிறப்புடைய அறிவு உண்டு. அதுபோல் கரு இடுவார்க்கும் அனைத்தும் உள்ளன. விந்துமாயையாகிய தூமாயையினின்றும் கருமுதலாம் விந்து உண்டாகும். அவ் விந்துவினின்று வரும் உயிர்வித்தை அசைவின்றி இருந்து உணர்வாரானால் தயிர்கடை மத்துப்போன்று விளங்கித் தோன்றும். அம் மத்தின் உள்ளீடாகச் சிவன் விளங்கித் தோன்றுவன். முப்பழத்துள் நடுப்பழமாகிய மாம்பழம் சிவனாவன். இஃது உவமையாகுபெயர். மற்றைய விரண்டும் வாழை, பலா. விது + அற என்பது விதற என நின்றது.(அ. சி.) விது - சலனம். மாங்கனி - சிவம். (10) 1910. கருத்தினில் அக்கர மாயுவு மியாவுங் கருத்துளன் ஈசன் கருவுயி ரோடுங் கருத்தது வித்தாய்க் காரண காரியங் கருத்துற மாறிவை கற்பனை 3தாமே. (ப. இ.) கருப்பதிக்குங் காலத்தில் தந்தை எண்ணும் எண்ணங்களே அக் கருவின்மாட்டுப் பதிந்து பின் விளக்கமுறும். அதனால் அக் கரத்தாலாகிய அறிவும் அறிவால் பெருகும் அகவையும் கருப் பதிக்கும்போது தந்தை எண்ணுவனவற்றையே ஆண்டவன் அமைத்து விடுகின்றனன்.
(பாடம்) 1. வையத்துப். 2. பேறிழவு. சிவஞானசித்தியார், 2. 2 - 6. 3. மனையறத்தின். 12. சம்பந்தர், 19.
|