அவற்றைப் புறஞ்செல்லாமற் காப்பதாகும். அப்படிக் காப்போமானால் மாற்றம் மனம் அளவை எல்லாவற்றையும் கடந்த எண்ணிலியாகிய சிவபெருமானின் எங்கும் இல்லாத அளவிடப்படாத பேரின்பம் இறவாத இன்ப அன்பின் பெறுபேறாக வந்துறும். இதுவே 'அஞ்சும் அடக்கா வகை அறிந்தேனே' (1995) என்பதன் செம்பொருள். 'அடக்கா' செய்யா என்னும் வாய்பாட்டு வினைஎச்சமாகக் கொள்க. எனவே, அடக்கி இறைபணியிற் செல்லுதல் என்பதாகும். அடக்கா - அடக்கி. (அ. சி.) இல்லி - துளை. இருட்டறை - சரீரம். எண்ணிலி - அளவிடப்படாதவனான. சிவன் இல்லது - துவாதசாந்தம். (7) 1992. விதியின் பெருவலி வேலைசூழ் வையந் துதியின் பெருவலி தொல்வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே. (ப. இ.) கடலாற் சூழப்பட்ட இந் நிலவுலகம் இருவினைக்கீடாக அவ் வினைப்பயன் துய்க்கும் நிலைக்களமாகவும், இருவினை ஒருவாது புரியும் பெருநிலமாகவும் சிவபெருமான் திருவுள்ளத்தால் படைக்கப்பட்டதாகும். அதனால் அது 'விதியின் பெருவலி' என்று ஓதப்பெற்றது. இவ் வுலகில் முழுமுதலாகிய சிவபெருமானை, 'பொதுநீக்கித் தனை நினைய வல்லாரா'தல் வேண்டும் என்னும் திருமுறையின்படி தொழுது அதன் பெறுபேறு துய்க்கும் இடமாகவுமுள்ளது வானுலகம் எனப்படும் சிவவுலகம். மக்கள் வாழ்க்கை அம்மை அப்பராம் செம்பொருளைச் செம்பொருட்டுணிவாம் செந்நெறியின்வழித் தொழுது பணிசெய்யும் மெய்யுணர்வின் வலியால் சீர்சிறப்பினை எய்தும். இவற்றிற்கு ஒப்புப் பெருங்கடலின் பெருவலியனைத்தும் அதன் நீர் வலியால் நிறைவது போன்று ஆகும். சங்கு, முத்து, பவழம் முதலிய விலை வரம்பில்லாப் பொங்குபொருள் உடைத்தாகையால் கடல் நிதியென்று ஒதப்பட்டது. அப் பெருமையும் அதற்கு மழைநீரால் வருவதாகும். அதனால் நீர்வலி என்பதற்கு மழைநீர் வலி என்பதும் ஒன்று. இவ் வுண்மை: "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்" - திருக்குறள், 17. என்னும் செந்தமிழ்ப் பொதுமறையான் உணர்க. (அ. சி.) நிதி - சமுத்திரம். (8)
|