814
 

(ப. இ.) வாழ்நாட்கு அலகாய் வயங்கொளி மண்டிலப்பொழுது மிக விரைவாக ஒவ்வொருநாளும் கழிந்துபோமாற்றைக் கண்டிருந்தும் வீணாகச் சாதி குலம் சமயம் என்னும் பொருள்பற்றி ஓயா வழக்கிட்டு அந்தோ! மாயும் மனிதர் பெறுவது என்னோ? ஏதுமின்று. இத்தகையோர் 'நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதி' சால் தூயோன் சிவபெருமான். அவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன். அவன் திருவடியினை நன்னெறியாகிய நீதியுள் நின்று பணிந்து வழிபடும் திருமுறை வகைமையினையும் உணரார். ஆதியாகிய அம்மையோடு கூடி விளங்கும் அப்பனாம் முதல்வனை அகனமர்ந்த அன்பினில் வைத்துத் திருமுறை வழியாகத் தொழுது தூமலர் தம் கைகளால் தூவிப் போற்றித் தொடர் புகன்று வணங்கிப் பூசனை புரியவும் அறிகிலர்.

(அ. சி.) சடக்கென - விரைவாக.

(2)

2048. கடன்கொண்டு நெற்குத்துக் கையரை யூட்டி
உடம்பினை யோம்பி உயிராத் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.1

(ப. இ.) ஒருபோ துணவை ஒழியென்று கூறினார்க்கு உடன்பட்டு ஒழிக்கும் தன்மைவாய்ந்ததன்று வயிறு. அத்தகைய வயிற்றுடன் கூடியது உடம்பு. அவ் வுடம்பினுள் வஞ்சகப்புலையர்கள் ஐவராவர். அவர் நினைவினை நிறைவிக்கும் பொருட்டுக் கடன்பட்டு நெற்பெற்று அவற்றைக் குற்றியூட்டுகின்றனர். என்னினும் இனிமைவாய்ந்தது உடம்பென்று, அவ் வுடம்பினையே உயிராகக்கொண்டு திரிவார். அத்தகையோர் உடம்பும் உயிர்நீங்கிப் பிணமாகின்றது. அவ் வுடம்பினை விரிந்த இடம் அமைந்த சுடுகாட்டுப்பக்கம் கொண்டுபோவர். ஈமவிறகின் மேல் ஏற்றுவர். ஏற்றி எரியூட்டுவர். அதனை மாறா இடமாகக்கொண்டு உடம்புகிடக்கின்ற உண்மையினைக் கண்டும் அதுபோன்று தம்முடலைக் கருதாது கனியினும் கட்டிபட்ட கரும்பினும் இனிக்குமென்று எண்ணித் திரிகின்றனர்.

(அ. சி.) கையரை ஊட்டி - வஞ்சகருக்கு விருந்து செய்து சாரல் - இடுகாடு. தழல் - அனல். முருடு - சிதை (முருட்டுக் கட்டை).

(3)

2049. விரைந்தன்று நால்வர்க்கு 2மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை யோராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக வொருங்கிநின் றாரே.

(ப. இ.) முன்னாளில் மெய்ப்பதியாகிய சிவபெருமானைச் செம் பொருட்டுணிவுச் செல்வர் நால்வர் சூழவந்து வணங்கிச் செந்தமிழாகமச் செழும்பொருளைச் செவியறிவுறுத்துமாறு வேண்டிக்கொண்டனர். சிவபெருமானும் மலைமீது விளங்கும் ஆலநீழலில் தென்முகச்


1. கள்வார்க்குத். திருக்குறள், 290.

" பூக்கைக். அப்பர், 5. 90 - 5.

2. தேவர்பிரான். சிவப்பிரகாசம், சந்தானபரம்பரை - 5.

" கல்லா. சிவஞானபோதம், மங்கலவாழ்த்து.