826
 

இல்லையாகும். இந் நிலையே வானோர்க்கு உயர்ந்த உலகமாகிய பேருலகாமென்பது. 'சிவ சிவ' என்று இடையறாது நாடிக்கொண்டு செய்யும் எச் செயலும் 'வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள், யானையால் யானையாத் தற்று' (678) என்னும் திருவள்ளுவப் பயனை மேற்கொண்ட அரும்பெருஞ் செயலாகும்.

(அ. சி.) பறக்கின்ற - பிரிந்துபோகின்ற.

(7)

2071. கூடியும் நின்றும் தொழுதெம் மிறைவனைப்
பாடியு ளேநின்ற பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின் றறிவுசெய் வார்கட்கு
நீடிய வீற்றுப் பசுவது வாகுமே.

(ப. இ.) இறைவனாகிய சிவபெருமானைத் திருமுறைவழியாகத் திருவைந்தெழுத்தோதிக் கூடி நின்று கூட்டுத்தொழுகை தொழுங்கள். தனித்திருந்தும் இனித்த அத் தொழுகையை ஏத்துங்கள். ஏத்துதல் ஈண்டு இயற்றுதல். அகனமர்ந்த அன்பினராய்த் திருமுறை பாடி அடியாருள் நின்று சிவபெருமான் திருவடியிணையை வணங்குங்கள். அவ்வடியார் கூட்டத்துள்ளே நின்று எல்லாம் சிவமாகக் காணும் இயற்கை அறிவு இன்னருளால் எய்துவார்க்கு அச் சிவபெருமான் கன்றீன்ற புனிற்றாப் போன்று நன்று நின்று வெளிப்பட்டு அருள்வன். எல்லாம் சிவமாகக் காணுதல் என்பது பல்வேறு அழகமைந்த கலன்களுள் வைக்கப்பட்ட ஆன்பால் ஒன்றாயிருக்கும் உண்மையினைப் புறம்பொசியக் காண்பதாகும். இது, பன்னிறம்சேர் பல்பளிங்கில் பால்காண்பார் பால்நிறத்தைப், பன்னிறத்தின் மேற்காண்பார் பாத்து என்பதனையொக்கும். மேலும் பலர் புரியும் கூட்டுத்தொழுகையில் பல்லோர் 'சிவ சிவ' என்றே பகர்மறை, எல்லாமொன்றாய்க் கேட்ப தேர்பு என்பது ஒக்கும்.

(அ. சி.) ஈற்றுப் பசு - கன்று ஈன்ற பசு.

(8)

2072. விடுகின்ற சீவனார் மேலெழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதங்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.

(ப. இ.) ஆவிநீங்கி ஆருயிர் மேலோங்கிப் போம்பொழுது 'சிவயநம' என்று நாடுங்கள். அதுவே சிவபெருமானின் திருவடியிணையினை நாடுவதாகும். நாடுவது சிந்திப்பது. அப்படி நாடுவதால் அத் திருவடிச் சிறப்பால் நும் வினைகள் கெடுகின்றன. அழிவில்லாத புகழையுடைய அழகனாகிய சிவபெருமான் உம்மை இமையவர் நடுவுள் இருக்குமாறு அருள்புரிகின்றான். இமையவர்: திருவடிப்பேறு பெற்ற அருள்ஒளி நிறைந்த மெய்யடியார். இமை - ஒளி. இமையவர் - ஒளியுடையவர். இமை கண்ணைக் காப்பதுபோன்று இவர்கள் நன்னெறி நான்மையினைக் காக்கும் நல்லார் ஆதலின் இமையவர் என்பதும் ஒன்று. இமையம் - திரு வெள்ளிமலை. திருவெள்ளிமலையில் சிவபெருமான் திருவடிக்கீழ் வாழும் பெருவாழ்வுபெற்ற திருவினர். அதனாலும் இமையத்தில் வாழ்வார் இமையவர் என்றலும் ஒன்று. அன்பு அறிவு ஆற்றலாகிய மூன்றன் ஒருப்பாடும் சேர்ந்துதான் காவல்