(ப. இ.) ஞானத்திற் சரியை என்று சொல்லப்படும் அறிவிற் சீலத்தார்க்கு ஆண்டானாகிய சிவனே உடம்பாவன். அறிவின் நோன்பினர்க்கு அருளோன் உடம்பாவன். அறிவிற்செறிவினர்க்கு அன்னையும் அத்தனுமாகிய விந்துவும் நாதமும் உடம்பாகும். அறிவின் அறிவினராம் மோனிக்கு உடம்பொத்த உயிர்நிலை முப்பாழ் என்று சொல்லப்படும் ஆணவம் கன்மம் மாயை மூன்றுங்கடந்த சிவபெருமான் திருவடிப்பேறே என்க. இந்நான்கும் முறையே அகலிடத்தார் ஆசாரத்தை அகலுதலும், தன்னை மறத்தலும், தன்னாமங்கெடுதலும், தலைவன்தான் தலைப்படுதலும் ஆகிய திருநெறி நான்மைத் திருவாகும். இக்குறிப்பு 'முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள்' என்னும் திருத்தாண்டகத் திருமறையுள் காண்க. 'மோனம் என்பது ஞானவரம்பு' என்ப. அதுவே அறிவின் அறிவாகும். அறிவின் அறிவு ஞானத்தின் ஞானம். மோனம்: முன்ஞானம் என்பதன் மரூஉ. முன்ஞானம் - முதன்மையான ஞானம். (அ. சி.) தநு - உடல். அது - தநு. விந்துவும் நாதமும் - விந்து, நாதம், தநு. முப்பாழ் - ஆணவம், கன்மம், மாயை. முத்தி - மகா காரண உடல். (14) 2097. விஞ்ஞானத் தோர்க்கா ணவமே மிகுதனு எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தானென்ப அஞ்ஞானத் தோர்க்குக் கன்மந் 1தனுவாகும் மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே. (ப. இ.) ஆணவமாகிய ஒருமலம் மட்டும் உடையார் விஞ்ஞானத்தராவர். இவர்களை விஞ்ஞானாகலர் என்பர். இச் சொல் மேலறிவால் கட்டற்றவர் எனப் பொருள்தரும். அகலர் - கட்டற்றவர். இவர்கள் கன்மம் மாயை என்னும் இரண்டின் தொடக்கற்றவராவர். இவர்கட்குப் பிணிப்பாகிய உடம்பு ஆணவம் மட்டுமே. அதனால் ஆணவமே மிகுந்த உடம்பென்பர். உடம்பு - பிணிப்பு விஞ்ஞானத்தை அடுத்ததாகிய அஞ்ஞானத்தோர் இருமலக்கட்டுடையார் அவர்கட்கு ஆணவம் கன்மம் இரண்டும் பிணிப்பாகும். எஞ்சு ஞானம்: எஞ்ஞானம். குறைந்த ஞானத்தையுடைய மும்மலக்கட்டுடையார்க்கு ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமும் பிணிப்பாகும். திருவடியுணர்வு கைவரப் பெற்றோர்க்குச் சிவனடியே உடம்பு ஆகும். மெய்ஞ்ஞானம் என்பது எதுகைநோக்கி மெஞ்ஞானமென்றாயிற்று. (அ. சி.) விஞ்ஞானத்தோர் - ஒரு மலமாகிய ஆணவமலம் உடையவர். எஞ்ஞானத்தோர் - எஞ்சு ஞானத்தோர், கன்மம் தவிர்ந்து எஞ்சியுள்ள ஆணவம், மாயை ஆகிய இரு மலமுடையவர். அஞ்ஞானத்தோர் - ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலம் உடையவர். (15) 2098. மலமென் றுடம்பை மதியாத ஊமர் தலமென்று வேறு தரித்தமை கண்டீர் நலமென் றிதனையே நாடி யிருக்கிற் பலமுள்ள காயத்திற் பற்றுமிவ் வண்டத்தே.
1. மெய்ஞ்ஞானந். சிவஞானபோதம், 8. 2 - 1. " உரைதருமிப். சிவஞானசித்தியார், 8 - 1.
|