2379. படைப்பு மளிப்பும் பயிலிளைப் பாற்றுந் துடைப்பு மறைப்புமுன் தோன்ற அருளுஞ் சடத்தை விடுத்த அருளுஞ் சகலத்து அடைத்த அனாதியை ஐந்தென 1லாமே. (ப. இ.) படைத்தல், காத்தல் இளைப்பாற்றுதலாகிய துடைத்தல், வினைநுகர்வாகிய மறைத்தல் இந் நான்கும் இயல்பாகச் சிவபெருமானிடத்தில் முன்தோன்றிய திருவருள் வாயிலாகத் தோன்றுவன. அத் திருவருள் ஆருயிர்களை மலப்பிணிப்பினின்றும் விடுவித்துச் சிவப்பிணிப்பில் இடுவித்து வாழ்விக்கும். பேரறிவுப் பேராற்றல் திருவினால் தொன்மையிலேயே ஆருயிர்களைப் பிணிப்பினின்றும் விடுவிப்பவனும் சிவனே. விடுவித்தற்பொருட்டு அவ்வுயிர்களுக்குப் புணர்ப்பு நிலையை முதற்கண் அவனருளினன். முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்பழம் பொருளாகிய அத்தொன்மைப் பெரும்பொருளே நுண்ணிய ஐந்தொழிலும் செய்தருளும் என்க. சகலத்தடைத்த அனாதியை - புணர்ப்பிற் புணர்த்த தொன்மையை. (அ. சி.) சடத்தை விடுத்த - உடற்பற்றை ஒழித்த. ஐந்து - அஞ்சு தொழில், படைப்பாதி முதலியன. (14) 2380. ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு வேறாகு மாயையின் முப்பான் மிகுத்திட்டங்கு ஈறாங் கருவி யிவற்றால் வகுத்திட்டு வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே. (ப. இ.) குண்டலியாகிய மாமாயையினின்று முப்பத்தாறு மெய்கள் சிவபெருமான் திருவுள்ளத்தால் தோன்றி விரியும். இம் முப்பத்தாறினையும் பகுக்குங்கால் உணர்த்துமெய் ஐந்து, உணர்வுமெய் ஏழு, உடல்மெய் இருபத்துநான்கு என்பனவாகும். இவை முறையே தூமாயை, தூவாமாயை, பகுதி மாயை எனக் கூறுவர். ஆருயிர்கட்கு முடிந்த முடிபாக வேண்டிய கருவிகளையும் இவற்றாலேயே வகுத்தருளினன். பதி பசு பாசம் என்னும் உண்மைகளையும் தொடர்புகளையும் அருளால் உணருங் காலத்துப் பாசத்தினின்றும் பசு வேறாகும். வேறாகவே பதியினைச் சென்றெய்தும். எய்துவதே வீடுபேறாகும். (அ. சி.) மாயையின் முப்பால் - சுத்தம், அசுத்தம், சுத்தாசுத்தம், அஃதாவது மாமாயை, மாயை, மூலம் என்பன. (15) 2381. வீட்கும் பதிபசு பாசமும் மீதுற ஆட்கும் இருவினை யாங்கவற் றாலுணர்ந்து ஆட்கு நரக சுவர்க்கத்திற் றானிட்டு நாட்குற நான்தங்கு நற்பாச நண்ணுமே. (ப. இ.) பதியானது பசுவினை மலநீக்கத்தின்பொருட்டு மாயா காரியமாகிய பாசத்தின்கண் விருப்பம் உண்டாகச் செய்யும். அவ்வுயிர்
1. ஏற்றவிவை. சிவப்பிரகாசம், பொது, 6.
|