நாதத்தினிடத்து வெள்ளியாகிய விந்து கீழ் நோக்கித் தங்குவதன் முன்னம், திங்களாகிய மதிமண்டிலத்துக்கண் அவ் விந்து செவ்வாயாகிய நாதத்துடன் கலந்து அங்குத் தங்கப் பயின்றோராவர். வெங்கதிர்: உவம ஆகுபெயராக முழுமுதற் சிவன் என்றலும் ஒன்று. நம்பி - ஆண்டான். (அ. சி.) வெங்கதிர் - சூரிய மண்டல அதிபதியாகிய சதாசிவம். சனி - அதோமுக மண்டலமாகிய சனி. நங்கை - மன உன்மனி. வெள்ளி - திங்கள்; விந்து. பொன் - செவ்வாய்; நாதம். (12) 817. திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக் கருத்தழ காலே கலந்தங் கிருக்கில் வருத்தமு மில்லையா மங்கைபங் கற்குந் துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே. (ப. இ.) பரியங்க யோகத்தால் உள்ளத்தைத் தூய்மை செய்து அதனால் புதனாகிய அறிவைத் திருவடியில் வைப்பதாகிய நன்மையைச் செய்வார்க்கு எண்ணிப் பார்க்கும் சிறந்த அழகோடு மேனிலையிற் கலந்திருக்கில் உடலுறு வருத்தம் ஏதும் இன்றாம். மங்கைபங்கனாகிய முழுமுதற் சிவனருளால், துருத்தி போன்ற நெற்றி நடுவண் வெள்ளி போன்ற திங்கள்ஒளியும் தளர்ச்சியின்றிக் கிளர்ச்சியுடன் எழும். ஏதும் - ஒரு சிறிதும். (அ. சி.) புதன் - அறிவு. வெள்ளி - சந்திர ஒளி. (13) 818. எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால் மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே. (ப. இ.) கொழுந்துவிட்டு எரிகின்ற தீயின்முன் கொண்டு போனதும் மெழுகு உருகுவது போன்று பயிற்சியில்லார்க்கு உடல் அழியும். அதனால் அஃது எல்லாராலும் விரும்பப்படுகின்றதில்லை. அருள் ஒளியைப்பரியங்க யோகப் பயிற்சியால் நெஞ்சத்தின்கண். அருளால் உணர்ந்தபின், பரவெளி தோன்றும். அவர்கட்கு உடம்பும் அழிவதில்லை, விழுகின்ற - விரும்பப்படுகின்ற. (அ. சி.) உழுகின்றது - அழிக்கின்றது. (14) 819. வெளியை அறிந்து வெளியி னடுவே ஒளியை அறியி னுளிமுறி யாமே தெளிவை அறிந்து செழுநந்தி யாலே வெளியை அறிந்தனன் மேலறி யேனே.1
1. காலமுண். 8. திருப்பாண்டிப் பதிகம், 5. " வேண்டினுண். திருக்குறள், 342. " முன்பெலா. அப்பர், 4. 28 - 1.
|