1806. தேவர்க ளோடிசை வந்துமண் ணோடுறும் பூவொடு நீர்சுமந் 1தேத்திப் புனிதனை மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள் நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. (ப. இ.) விண்ணவர்கள் சிவபெருமானைச் சென்னிதாழ்த்துப் புகழும் புகழுரை எங்கணும் பரந்து மண்ணுலகின்கண் வந்து நிறையும் மூவருக்குமுயிராய் உள்நின்றியக்கலின் கலப்பால் மூவராய், அம் மூவர் மாட்டும் அருளும் ஆணையும் வைத்து முதன்மையாய் நிற்றலின் மூவரின் முதல்வனாய், நின்றருள்வன் சிவன். இத்தகைய பேரருட் பெருநீர்மை தவம்தரு தன்மையாம் அவனருளின்றி அறியவல்லார் ஒருவருமிலர். 'வல்லாரே' என்பதன்கண் உள்ள ஏகாரம் எதிர்மறை. (அ. சி.) ஓடிசை - பரந்த கீர்த்தி. மூவரிற் பன்மையாய் - மூவரொடு கலத்தலால் பன்மையாய். (15) 1807. உழைக்கவல் லோர்நடு நீர்மல ரேந்திப் பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி இழைக்கொண்ட பாதத் தினமலர்2 தூவி மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. (ப. இ.) தம் ஆருயிர் உய்யுமாறு சிவபெருமானைத் திருமுறை வழியாகத் திருவருள் துணையால் வழிபடும் திருவடியுணர்வுசேர் நல்லார் நடுவில் பூவும் புனலும் கைக்கொண்டு, நாளும் தவறுதலில்லாமல் சிவபெருமானைக் குறித்துச் சண்டேசுரர் செய்ததுபோன்று சிவவழிபாடு செய்வதே இறப்பில் பெருந்தவமாம். அச் சிவவழிபாட்டினைச் செய்து அடிச் சார்ந்தார் கலந்திருக்கும் திருவடியில் கொல்லாமை முதலிய எட்டுப் (1804) பண்புகளும் வாய்ப்பதன் பொருட்டு அவற்றின் அடையாளமாகிய இனமலர்களைத் திருமுறைப் போற்றி மொழிந்து, வழிபட்டு மெய்சிலிர்த்து இன்பக் கண்ணீர் அருவி பொழிய நன்னெறியில் நிலைத்து நிற்பீராக. மழைக் கொண்டல்பேல் இன்பக் கண்ணீர் பெருக்குவதெனக் கொள்க. (அ. சி.) பிழைப்பு - தவறுதல். இழைக்கொண்ட - சேர்ந்து இருக்கின்ற. மழைக்கொண்டல் போல - குளிர்ந்த மேகம்போல மெய் குளிர்ந்து. (16) 1808. வென்று விரைந்து விரைப்பணி யென்றனர் நின்று பொருந்த இறைபணி நேர்படத் துன்று சலமலர் தூவித் தொழுதிடு கொண்டிடு நித்தலுங் கூறிய வன்றே. (ப. இ.) ஐம்புலன்களையும் வென்று நறும்புகையும் நெய்யொளியும் காட்டும் சிவப்பணியினைச் செய்யும் தொண்டர்கள் நேர்நின்று அன்பார்
1. மாதர்ப். அப்பர், 4. 3 - 1. " தேவர்கோ. 8. திருச்சதகம், 30. 2. மனமது, சிவஞானசித்தியார், 2. 2 - 21.
|