(அ. சி.) சிவகதி - சிவத்துக்கு இருப்பிடம். ஐந்து - வாய், நாசி, புருவம் மத்தகம், உச்சி. (மத்தகம் - நெற்றி நடு) அவ்விடத்துச் சமனை, உன்மனை ஆகிய ஆதாரங்களை உளவாதல் பற்றிக் கூறினார். தாய் நாடி - சுழுமுனைநாடி. (10) 2536. அறிவறி யாமை இரண்டு மகற்றிச் செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப் பிறிவறி யாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி 1யாரே. (ப. இ.) ஆருயிர்க்குச் சுட்டறிவும் சிற்றறிவும் ஏற்படுவது கட்டு நிலையாகும். இவை யகன்றாலன்றி முற்றறிவாகிய ஒட்டு நிலை வாய்க்காது. ஆணவ மறைப்போடு மட்டும் தங்கி ஏதும் அறியாதிருத்தல் அறியாமையாகும். ஆதலால் அறிவு அறியாமை இரண்டினையும் திருவருள் ஒருங்ககற்றும். இது தூய்மை செய்து தூயவாயிட்ட பொடிக் கோலத்தினை மாண்புமிகு மாக்கோலம் இடுங்கால் அகற்றுவதை யொக்கும். எங்கணும் செறி நிறைவாய் நின்ற பேரறிவாம். சிவனை நம்மை விட்டு என்றும் பிரிவின்றி நீங்காதுறையும் சிவபெருமானை அருளால் அவ்வாறே உணர்ந்து பேணுதல் வேண்டும். அங்ஙனம் பேணும் பீடு குறியாதவர் திருவடிப் பேறு எய்தும் கொள்கை யறியாதவராவர். கொள்கை: கொள், முதனிலைத் தொழிற்பெயர். (அ. சி) செறிவறிவாய் - எல்லாம் அறிபவராய். கொள்-கொள்கை. (11) 2537. அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்புங் கலப்பும் அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால் அறிவான் அறிந்த அறிவறி 2யோமே. (ப. இ.) மெய்ந்நூலுணர்ந்த மேலோர் அருளால் அறிவது அப்பும் அனலும். அப்பு - நீர். அனல் - தீ. அஃதாவது மெய்களாகிய தத்துவங்களின் தோற்றமுறை ஆய்தல். பொருள் நுட்பம் உணர்வார் அவற்றின் பண்பும் கலப்பும் ஒடுக்கமும் ஆய்ந்துணர்வர். இங்ஙனம் அறிவதும் எல்லாம் ஒருங்குணரும் எண் குணமும் முற்றுணர்வும் இயல்பாகவே ஒருங்கமைந்த சிவபெருமானாலே யாம். அஃதாவது அவன் உடங்கியைந்து இடம்பட அறிவித்தாலன்றி ஆருயிர்கள் அறியா. அவனையின்றி அறிவானாகிய ஆருயிர் அறிந்ததென்பதை எவருமறியார். அப்பு என்பது திருவருளையும், அனல் என்பது சிவபெருமானையும் குறிக்கும் குறிப்பாகும். அவற்றின் கலப்பு என்பது அருளும் சிவமுங் கலந்து அருளோன் என நின்று ஆருயிரினையும் அனைத்துலகினையும் தொழிற்படுத்துங் கருத்தினைக் குறிக்கும் குறிப்பாகும். கூடிக் களிக்கும் குணங்குறியானன்றி மற்று, நாடித் தெளிதலெவ்வாறு.
1. அறியாமை. சிவஞானசித்தியார், 8 . 2 - 20. 2. அறிவிக்க. சிவஞானபோதம், 8 . 2 - 2. " சத்தியும். சிவஞானசித்தியார், 1 . 3 - 9.
|