1041
 

தோற்றுவித்தும் அருள்கின்றனன். திருவருளால் இவ்வுண்மைகளை உணர்ந்து அவன் திருவடிச் சிறப்புற்று அவனருளால் வாழ்ந்தனன் என்க.

(அ. சி.) திரன் - உறுதி. செறிவு - நிறைவு. வரன் - மேன்மையான செயல்.

(4)

2546. அளந்து துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்
கிளர்ந்த பரஞ்சிவஞ் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனு 1மாமே.

(ப. இ.) முழுமுதற் சிவபெருமான் ஆருயிரின் செவ்வியினை அளந்தறிந்து செயலற்ற நிலையாம் துரியநிலைக்கண் அவ்வுயிரின் சிற்றறிவினைத் தன் முற்றறிவின்கண் அடங்குமாறு செய்வதாகிய வாங்குதலைச் செய்து, அவ்வுயிரின் தூய்மையும் செவ்வியும் சிவனினைவும் ஒருங்கமைந்த உள்ளத்தின்கண் சிவபெருமான் மேலோங்கித் திகழ்கின்றனன். அதனால் அவ்வுயிர் மன்னன் மனைவி மன்னி என்று அழைக்கப்படுவதுபோல் பரமன்தாள்சேர் அடிமை பரன் என அழைக்கப்படுகிறது. அந்நிலையில் அவ்வுயிர் உலக நுகர்வினை ஒழித்துவிடுகின்றது. பரமாகிய சிவபெருமானும் உரமாகிய ஆருயிரும் இருப்பதும் இருப்புமாய்ப் புணர்ந்து எழில்பெற நிற்றலால் ஆருயிர்க்கிழவன் அறிவு வெளியனாவன். உரம் - அடிமை இருப்பது - ஆண்டான். இருப்பு - அடிமை. அறிவுவெளி: வெட்டவெளி; சிதாகாசம்.

(அ. சி.) அறிவினை - சீவ அறிவினை. உளங்கொள் பரம் - உள்ளத்தின்கண் ஒளித்திருக்கும் சிவத்துடன் இருக்கும் ஆன்மா. கிளர்ந்த பரம் - தெளிந்த ஆன்மா. வெட்டவெளியன் - சிதாகாய வடிவினன்.

(5)

2547. இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்தஎன் நந்தி இதயத்து 2ளானே.

(ப. இ.) முழுமுதற் சிவபெருமான் எரிசேர் இரும்பிடைக் கரந்த நீர்போன்று அடிமையாகிய என்னைத் தன் திருவடிக்கீழ் ஒடுக்கிக் கொண்டனன். தனிப்பெரும் சிறப்புவாய்ந்த விழுப்பொருளாம். பரம்பரமான சிவன் பரமாகிய மேனிலைப்பாடு அல்லது அப்பால் நிலையையும் கடத்தியருளினன். திருவடி அடிமை உரம்பெறுதற் பொருட்டு முப் (2457) பாழ்வெளியையும் ஒடுக்குவித்தருளினன். அஃதாவது முப்பாழ் வெளியையும் கடந்து நின்றருள்தல். அங்ஙனம் நின்றருள்பவன் நந்தி. அவன் என்னுள்ளத்துள் உறைந்து நிறைந்து நின்றருளினன்.

(அ. சி.) பரமது விட்டு - பராவத்தையைக் கடந்து. முப்பாழ் ஒளி - முப்பாழ் ஒளிக்கும் அதீதப்பட்ட ஒளி.

(6)


1. மிக்கதொரு. சிவஞானசித்தியார், 8. 2 -19.

2. புலவரை. புறநானூறு, 21.