1042
 

2548. கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்
அரிய துரியமேல் அண்டமும் எல்லாந்
திரிய விழுங்குஞ் சிவபெரு 1மானே.

(ப. இ.) யானை நோயால் பற்றப்பட்ட விளாம்பழம் ஓட்டில் ஒரு கேடுமில்லாதிருக்க, உள்ளே சதைப்பற்று ஏதுமில்லாமலிருக்கும் இயல்பினது. அதுபோல் உயிரும் உயிரைத் தாங்கிநிற்கும் திருவருளும், முன்னோதும் சிவனும், சொல்லுதற்கு அரிய துரியத்தின்மேல் அனைத்துலகங்களும் பின்னோதும் சிவனாம் செம்பொருளினால் மாறுதல் செய்து ஒடுக்கப்படும். ஓதுசிவன் - ஓதப்படும் சிவன். முன்னோதும் சிவன் முப்பத்தாறாமெய்யினைத் தொழிற்படுத்தும் சிவனாகிய அத்தன். பின்னோதும் சிவன் தத்துவங்கடந்த செம்பொருள். ஆருயிர்க்குத் திரிபு மாயையின் சார்பும் பற்றும் அகன்று தாயனைய திருவருளின் சார்பினை எய்துதல். பரமாகிய அருளுக்குத் திரிபு அவ்வுயிரிக்கு முன்பு நடப்பாற்றலாய் நின்று உலகினை உணர்த்திவந்தது மாறி இப்பொழுது வனப்பாற்றலாய்நின்று முன்னோதும். சிவனை உணர்த்துதல். முன்னோதும் சிவனுக்குத் திரிபு ஆருயிர் அருள்களாகிய இவற்றுடன் தானும் செம்பொருளாய் நிற்றல். உலகினுக்குத் திரிபாவது காரியப்பாட்டால் பருமையாகத் தோன்றுவது நுண்மையாய்க் காரணத்தின்கண் ஒடுங்குவது. அச் செம்பொருளாம் சிவன் எவ்வகைத் திரிபும் எய்தாது என்றும் ஒன்றுபோன்று நின்று நிலவுவன். திரிபனைத்தும் ஆருயிர்க்குச் செம்மை. நலம் எய்தும், அரிய வாய்ப்பாங்கருளவாம் என்பதனை நன்கு நினைவு கூர்க.

(அ. சி.) கரி - யானை (யானையுண்ட விளங்கனி) - விளாமரத்து நோய்க்கு யானை என்று பெயர். திரிய - மாறுபட.

(7)

2549. அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்
நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாமறி யோமன்றே.

(ப. இ.) முழுமுதற் சிவபெருமான் எல்லாவற்றிற்கும் அந்தமும் ஆதியுமாகவுள்ளான். அதுபற்றியே மெய்கண்ட நாயனார் தாம் அருளிய தனித்தமிழ் முழுமுதற் சிவஞானபோத முதனூல் முதனூற்பாவின்கண் "அந்தம் ஆதி என்மனார் புலவர்" என்றருளினர். தம்மினின்றும் வெளிப்படுத்தப்படும் வழிவழியாயுள்ள அருளாற்றல்களையும் அவ்வாற்றல்களுடன் விரவிய நம்மையும் தன் திருவடிக்கீழ் ஒடுக்கியருளினன். ஞானத்தால் அறியப்படும் ஞேயாந்தத்தில் நந்தியிருந்தருளினன். அவ்விருப்பினை நம்மால் நுகரமுடியும். ஆனால் நுவலமுடியாது. மெய்ஞ்ஞானம் - மெய்யுணர்வு. நேயம் - ஞேயம்: மெய்யுணர்வால் உணரப்படும் மெய்ப்பொருள். அதன் அந்தம்: சிவதுரியாதீதம் - அனைத்துங் கடந்த சிவபெருமானின் நினைப்புக்கும் எட்டாநெடுநிலை. உண்ணுதல்: விழுங்குதல்; ஒடுக்குதல் அறிதல் - வேறாய்நின்றறிவது. உணர்தல் - ஒன்றாய் நின்று செறிந்து ஓவாது நுகர்வது.


1. மெய்ப்பால்வெண். அப்பர், 6. 26 - 4.

" வெஞ்சின. சீவகன், 4. குண, 174.