அடிமையையும் காதலிப்பார்க்குக் காரணத்தை விழைதலே குழைவில் கடனாம். குழைவில் - குற்றமில்லாத. (3) 2571. அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்றற வீசி விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானந் தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே. (ப. இ.) அன்றும் புலனாயுள்ள பூதங்கள். என்ற விடத்து ஆருயிருடன் மாறுபட்ட புலன்களுக்கு வலியாகவுள்ள பூதம் எனப் பொருள்படும் ஈண்டு. அவை தம்முள் ஒன்றோடொன்று 'மாறுபட்டு ஒன்றனை யொன்று மிக்கு நின்று அழிக்கும் தன்மைய என ஓதினர். அப் பூதங்கள் வாயிலாக விளைவதும் வேறுபடுவதும் ஆகிய ஊண் உடை உறையுள் உறை முதலியவற்றுள் கொண்டுள்ள பற்றுக்களை அறவே மாற்றி எவ்வகை வேட்கையையும் விடுவதே மெய்ந்நெறியாகும். மெய்யாக நிலைபெற்று நின்று நீளின்பந்தரும் திருவடியுணர்வைத் தொடுவதே சிறப்பென்க. அவ் வுணர்வே நம்மை அகலாது தொடர்ந்து ஆண்டவன் அடிக்கீழ் அமர்த்தும். அன்றுதல் - மாறுபடுதல். உறை - மருந்து. (அ. சி.) அடுவன - ஒன்றையொன்று பகைத்து அழிக்கும் பூதங்கள். தம்மைத் தொடர்தல் - தத்துவங் களைந்து ஆன்மாவை ஆராய்ந்து அறிதல். (4) 2572. உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர் அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர் தவாக்கடல் ஈசன் தரித்துநின் 1றானே. (ப. இ.) பருவ காலத்துப் பொங்கும் கடல் போன்று அளவின்றிப் பொங்கி உலகினை அழித்த நீரூழிகள் பல கழிந்தன. இவற்றினைக் கடலூழி என்ப. வானோர் முதலாயினார்களும் இன்பதுன்பக் கடலிடைப் பட்டு மாண்டு மடிந்து போயினர். மண்ணோர்கள் அவாக் கடலுட்பட்டுப் பிறப்பதற்கே ஆளாகி அழுந்தினர். என்றும் பொன்றாப் பேரின்ப அருளாழியைச் சிவபெருமான் தாங்கி நின்றனன். (அ. சி.) உவாக்கடல் - பவுர்ணமியிற் பொங்குகின்ற கடல். துவாக் கடல் - சுகதுக்க வடிவக் கடல். தவாக்கடல் - நீங்குதல் இல்லாத அருட்கடல். (5) 2573. நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல் உன்தொழி லற்றுச் சுத்தம தாகலும் பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.
1. அவாவென்ப. திருக்குறள், 361. " ஆராவியற்கை. "370. " அற்றவ. "365. (பாடம்) 2. துன்தொழி.
|