(ப. இ.) நெடுநாள் நீங்காது நின்ற இருவினையும், மும்மலப் பிணியும், தொடர்வறாது நீண்டு நினைப்பதாகிய தியானமும் அகன்று அருளால் தூய்மை எய்தும் ஆருயிர். அதன்பின் ஐம்புல வரிவும் நீங்கும். நீங்குமாறு செய்தருளிய திருவருள் நேர்பெற வெளிப்படும். அவ் வருள் அவ்வுயிரைத் தன்னில் அழுத்தும். அழுத்தவே ஆருயிர் திருவடியுணர்வினதாகும். அந் நிலையே சிவஞான நிலை; அந் நிலை நிற்பாரே ஞானிகள். அவர்கள் எய்திய அருள் அழுத்தமே மெய்யுணர்வுத் தூய்மை. ஞானிகள் - நல்லார். (அ. சி.) பிணி - பாசம். நெடுஞ்செயல் - தவம். உன் தொழில் - நினைத்தல். ஐங்கருமம் - ஐம்புல வியாபாரம். (6) 2574. உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம் பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாந் திண்மையின் ஞானி சிவகாயங் கைவிட்டால் வண்மை யருள்தான் அடைந்தன்பில் ஆறுமே. (ப. இ.) திருவடியுணர்வாகிய உண்மையினைத் திருவருளால் உணர்ந்து நன்னெறியிற் செல்ல என்றும் பொன்றா அறிவொளிச் செறிவாய் நிற்கும் சித்தி முத்தி கைகூடும். மாயாகாரிய விருப்பமாகிய பெண் மயக்கம் நீங்கினால் அட்ட சித்தியாகிய பேறு கிடைக்கும். உரன் என்னும் திண்மைசேர் நல்லார் தாம் ஒடுங்கி நிற்பதாகிய சிவ துரியத்தையும் கைவிட்டால் வளமிக்க திருவருள் கைவரும். கைவரவே திருவடியுணர்வில் அழுந்தும். அவ் வன்பிலே இன்புற்றமையும். திண்மை - வைராக்கியம். ஆறும் - அமர்ந்திருக்கும். (அ. சி.) உற நிற்க - பேறு பெறுதற்குரிய. திண்மை - வைராக்கியம். சிவகாயம் - தான் ஒடுங்கி நிற்கும் சிவதுரியம். அன்பில் ஆறும் - அன்புடன் அமரும். (7) 2575. அவனிவன் ஈசனென் றன்புற நாடிச் சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார் பவனிவன் பல்வகை யாமிப் பிறவி புவனிவன் போவது பொய்கண்ட 1போதே. (ப. இ.) தாம் சிவனாகத் திருவடி யுணர்வால் திருநீறிடுவர். அவரைச் சிவனாகவே உண்மையன்பினர் எண்ணுவர். அம் முறையில் ஆருயிராகிய இவன் அவனாகிய முறையால் இவனை ஆண்டானாகிய ஈசனென்றே அன்புற நாடுவர். நாடுதல் - சிந்தித்தல். அவ் வகையாக நாடிச் சிவனே இவன். இவனே ஆண்டான். இவ் வுண்மையை அருளால் உணர்தல் வேண்டும். இவ் வுண்மையினை உணராதார்க்குப் பல்வகைப் பிறவி யுண்டாகும். உலகியற் பொய்ம்மையை அருளால் உணர்ந்த போது பல்வேறு புவனங்களில் போய்ப் பிறக்க நேரும் வினைகள் அத்தனையும் அகன்றொழியும் புவனம் என்பது புவன் என நின்றது. (அ. சி.) பவனிவன் - பாவத்தையுடைய இச் சீவன். புவனிவன் போவது - இவன் போகும் பலவகைப்பட்ட புவனங்கள். (8)
1. இவனுலகி. சிவஞானசித்தியார், 10.
|