பேரண்புவாய்ந்த சிவனடியார் சித்தக் குகையும், திருமடம் திருக்கோவில் தொழுமிடம் முதலிய இடவகைகளும் இயம்புவன். அகநிலை ஆதாரமாகிய ஆறுநிலைகளும், புறநிலை ஆதாரமாகிய சிவகுரு சிவனடியார் முதலிய திருமேனிகளும், காடு முதலிய பீடுசேர் இடங்களும் இயம்புவன். யாவர்க்கு என்றால் பதினான்கு உலகங்களிலும் வாழும் பயன்சேர் பல்லோர்க்கும் என்க. ஈராறு : பன்னிரண்டு. இரு: இரண்டு. ஆகப்பதினான்கு. (அ. சி.) ஈராறு இருநிலம் - பதினான்கு உலகங்கள். (4) 2605. முகம்பீட மாமட முன்னிய தேயம் அகம்பர வர்க்கமே யாசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்ணென் கிரியை சிதம்பரந் தற்குகை யாதாரந் தானே. (ப. இ.) சிவவெருமானுக்குச் சிவகுருவின் திருமுகமே தாமரை இருக்கையாகும். சிவகுருவின் திருமடமே கருதப்படும் சிறந்த இடமாகும் தேயம் - இடம். ஆருயிர்களின் தூயவுள்ளங்களே குற்றமற்ற அருட்காட்சிகளை யருளும் நிலைக்களம். அதனால் அவ்வுள்ளங்களில் இருத்துதலே காட்சியாகும். ஒவ்வொருவரும் தத்தம் உள்ளங்களைச் சிவபெருமானுக்கு உகந்த உவப்பமை இடமாக்குதல்வேண்டும். பதினாறு (1885) வகையான வழிபாட்டுச் செய்கைகளைச் சிறந்த காதலுடன் செய்தல்வேண்டும். அன்புசேர் இன்பவுள்ளம் அறிவுப் பெருவெளியின் நுண்ணிய நிலைக்களமாகும். எண் எண் - பதினாறு. இஃது உம்மைத் தொகை; எட்டும் எட்டும் கூட்டப் பதினாறாகும். (அ. சி.) முகமபீடம்-பதும ஆசனம். மடம் முன்னிய தேயம் - தேயமே மடம். அகம்பர வர்க்கமே - அகத்தில் பரனை இருத்துதலே. அகம்பர மாதனம் - அகத்தைப் பரனுக்கு ஆதனமாக்கி. எண்ணெண் கிரியை - கருதப்படும் எட்டுவித கிரியைகளும். குகை - இருதயம். (5) 2606. அகமுக மாம்பீடம் ஆதார மாகுஞ் சகமுக மாஞ்சத்தி யாதன மாகுஞ் செகமுக மாந்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை 1யோர்க்கே. (ப. இ.) அகமுகம் - நினைவகலாவுள்ளம் சிவபெருமானுக்குப் பீடமாகும். அதுவே நிலைக்களமுமாகும். உலகினைத் தொழிற்படுத்தும் திருவருளாற்றல் சிவபெருமானுக்குத் திருவுருவாகும். திருவுரு - ஆதனம். அத்திருவுருவின்கண் விளங்கித்தோன்றி உலகில் வெளிப்படுபவன் சிவபெருமானே. அவன் ஒருவனே தேவன். திருவருளால் உன்முகமாய்த் தேரும் நல்லறிவாளர்க்கு இவ்வுண்மைகள் நன்கு புலனாகும். (அ. சி.) அகமுகம் - உள் நினைந்திருப்பது. சகமுகம் - உலக வியாபாரங்களில் கலப்பது. செகமுகமாம் - உயிர்களைக் காத்தற் பொருட்டு உலக இன்பங்களைச்செய்த. அகமுக மாய்ந்த - சிந்தையை உள்பக்கம் திருப்பி ஆராய்ந்து திருவடி நினைத்த. (6)
1. எவ்வுருவும். சிவஞானபோதம், 8. 4 - 2.
|