கடந்து அறிவுப் பெருவெளியில் நிற்கும் செறிவினோர் திருமேனியைத் தனக்குத் திருமேனியாகக்கொண்டு எழுந்தருள்வன் சிவன்.(அ. சி.) யோகக் கடவுள் - யோகத்தால் அறியப்படும் கடவுள். வெளியானோர் - பசுகரணம் நீங்கிச் சிவகரணமுடையோர். (15) 2623. பரசு பதியென்று பார்முழு தெல்லாம் பரசிவ னாணை நடக்கும் பாதியாற் பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு உரிய பதியும்பா ராக்கிநின் றானே. (ப. இ.) பரசு என்று சொல்லப்படும் கோடாலிப் படையைத் தாங்கியுள்ள சிவபெருமான். அனைத்துயிர்கட்கும் அனைத்துலகங்கட்கும் பதியாவன். அவனையே பதியென்று பார் முழுதும் வணங்கும் பார் முழுதும் அவன் திருவாணையே முட்டின்றிச் செல்லும் முழுவாணையாகும் மெய்(தத்துவம்)களைப் பகுத்துணர்வதாகிய தத்துவ ஞானம் கைவந்த செம்பொருட்டுணிவினர்க்குப் பெரிய பதியாகிய திருவடியுலகினை அமைத்தருளினன் சிவன். பின்னாகச் செவ்வி வாய்த்துவரும் அடியவர்கட்கு உரிய பதியும் பாராகிய உலகமென அமைத்தருளினன். அவனே எங்கணும் நீக்கமற நிறைந்துநின்றருளினன். செம்பொருட்டுணிவினர்: சைவசித்தாந்தர். (அ. சி.) பரசும் - புகழப்படும். பாதியால் - தத்துவ ஞானத்தால். பெரிய பதி - முத்தி. பார் ஆக்கி - உலகைப் படைத்து. (16) 2624. அம்பர நாதன் அகலிட நீள்பொழில் தம்பர மல்லது தாமறி யோம்என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெரு மானருள் பெற்றிருந் தாரன்றே. (ப. இ.) பேரறிவுப் பெருவெளியின் பெருந்தலைவன் சிவபெருமான். அம்பரநாதன் என்பதற்கு அழகிய மேலான முதல்வன் என்றலும் ஒன்று. நீண்ட பெரியவுலகங்கள் அனைத்தும் அவன் திருவாணையாலேயே நடக்கின்றன. இவ்வுண்மையை யன்றி வேறொன்றும் நாமறியோம் என்று மெய்யடியார் கூறுவர். மேலிடத்துள்ள வானவரும் தானவரும் இவ்வுண்மை யினையுணர்ந்திலர் இவ்வுண்மையினை யுணர்ந்த மெய்யடியார்கள் எம்பெருமான் திருவருள்பெற்று இனி திருந்தார்கள். (அ. சி.) நீள் பொழில் - பெரிய உலகம். தம் பரம் - தமது கடவுள். உம்பர் - வானுலகு. (17) 2625. கோவணங் கும்படி கோவண மாகிப்பின் நாவணங் கும்படி நந்தி யருள்செய்தான் தேவணங் கோமினிச் சித்தந் தெளிந்தனம் போய்வணங் கும்பொரு ளாயிருந் 1தோமன்றே. (ப. இ.) தேவர்கோ, மூவர், செழும்பொழிற்கோ மற்றும் யாவரும் கோவென வணங்கும் கோவணன் சிவபெருமான் அங்ஙனம் கோவணம்
1. என்றுநா. மூவுருவின், அப்பர், 6.98 - 5, 6.
|