இனிமை மிகு தனிச் செம்மொழி யென்னும் தமிழ்மொழியேயாம். அம்மொழிக்கண் வழங்கிய ஒலிக் குறிப்புக்களை ஒரு வரையறைப்படுத்தி ஐம்பத்தொன்று என அமைத்தனர். அதற்குக் தக்கவாறு வரிவடிவங்களையும் அமைத்தனர். அந் நிலையிற்றான் அகர முதலாக ஐம்பத்தொன்று என அறுதியிட்டனர். பின்னும் நுணுகி இயல்பாகப் புணர்நிலைக்கண் தோன்றும் ஒலித்திரிபுகளுக்கு வரிவடிவு தனித்தனியே அமைக்காமல் ஆய்தம் என்னும் முப்பாற் புள்ளியின் கூட்டரவால் உணர்தல் கூடுமெனக் கண்டனர். அக் காலத்து வரிவடிவை முப்பத்துமூன்றென வரைசெய்தனர். அதுவே அன்றுதொட்டு இன்றுகாறும் வழங்கிவருகின்றது. ஒலி முப்பத்தாறாம் மெய்யாகிய நாதத்தினின்றும் தோன்றுவதாகும். அங்ஙனம் தோன்றுங்கால் வாயிலுள்ள பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் முதலிய உறுப்புக்களின் தொழிலின்றி வாய்திறந்த அளவானே வரும் ஒலி அகரமாகும். அதனான் அவ் வொலி முதற்கண் அமைக்கப்பெற்றது. அவ் அகரம் முதலாக ஐம்பத்தொன்றென்க. விரிந்தபின் குவிதல்வேண்டுமாதலின் உகர முதலாக உற்றுத் தோன்றியதாகும். பின்பு அவ் வொலி ஒடுங்குதல் வேண்டும். அம் முறையில் மகர இறுதியாய் மாய்ந்து மாய்ந்தேறி என ஓதினர். இம் மூன்றும் ஒருபுடை யொப்பாக முப்பொருளும் குறிப்பனவாகும். அவை முறையே அறிவன், உறைவோர், மறைப்பது என்றாகும். நகர முதலாகிய 'நமசிவய' என்னும் தமிழ்மறை நந்தியின் திருப்பேராகும். அவ் வுண்மை வரும் திருமுறைத் திருப்பாட்டான் உணர்க: "நந்தி நாம நமச்சிவா யவெனும் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே." (3. 120 - 11.) (அ. சி.) அகார....றாகி-தமிழ்மொழிக்கு வட்டெழுத்துக் காலத்திலும் அதற்கு முந்தியும் உயிர்கள் 16, மெய்கள் 35. ஆக51. (2) 2651. அகராதி யீரெண் கலந்த பரையும் உகராதி தன்சத்தி யுள்ளொளி யீசன் சிகராதி தான்சிவ வேதமே கோண நகராதி தான்மூல மந்திர நண்ம்மே. (ப. இ.) திருவருட் கலப்பால் தோன்றும் அகர முதலிய உயிரெழுத்துக்கள் பதினாறு. உகராதி சிவபெருமானின் திருவருளாற்றலாகும். அவ் வாற்றல்களின் உள்ளொளியாய் விளங்குபவனும் சிவனே. சிகர முதலாக ஓதப்பெறும் (2550) 'சிவயநம' சிவவேதம் என்று சொல்லப்படும் திருவடியுணர்வாகும். இவ் வுணர்வினைப் பெறும் உரிமை வாய்ந்த ஆருயிர் கோணம் எனப்படும். நகர முதலாக ஓதப்படும் 'நமசிவய' மூலமந்திர மெனப்படும். இவற்றால் திருவடிப் பேறு எய்தும். இது பற்றியே "நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க" எனச் செந்தமிழ் மறைமுடிவும் ஓதுவதாயிற்று. நண்ணுமே என்பது நண்ம்மே என நின்றது. (அ. சி.) அகராதி ஈரெண்-அகர முதலிய 16 எழுத்துக்களில் (தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் 16). (3)
|