அவ்வாதியருளாகிய நகரமும் அதனால் செலுத்தப்படும் மகரமும் ஆகிய இரண்டினையும் நீக்கிய இடத்து அங்குத் திருவருளாற்றலுடன் கூடிய சிவ என்னும் சிறப்பு எழுத்துக்களை யமைத்தல்வேண்டும். அமைக்கவே 'சிவயசிவ' என அமையும் இம்முறையே கணிக்கில் குற்றமற்ற சிவவுருவ வாயிலாம் சிவச் செறிவு கைகூடும். சிறந்து சொல்லப்படும் 'சிவயசிவ' என்னும் மறை மலம் அகன்று நலமோங்கி நிற்கும் உண்மை நிலையாகும். இது செறிவினர் ஓதும் சீர்மையதாகும். (அ. சி.) நம்மலம் எல்லாம் - நகர - மகரங்களால் குறிக்கப்பட்ட மலங்கள் எல்லாம். அவ்வாதிகளை - அந்த முதலில் உள்ள எழுத்துக்களாய ந-ம என்பவைகளை. (4) 2663. தெள்ளமு தூறச் சிவாய நமவென்று உள்ளமு தூற வொருகால் உரைத்திடும் வெள்ளமு தூறல் விரும்பியுண் ணாதவர் துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே. (ப. இ.) தெளிந்த திருவடியமுது ஓவாது ஊறித் தாவா இன்பந் தலைத்தலைச் சிறக்கும் பொருட்டுச் 'சிவயநம' என்னும் திருமறையினை உள்ளத்துள்ளே திருவடியின்ப அமுதுபெருகி ஊறக் காதலால் ஒருகாலுரைத்தல்வேண்டும். உரைக்கவே புருவநடுவில் தோன்றும் வெள்ள மொத்துவரும் திங்கள் மண்டிலத் திருவமுது அளவின்றி ஊறும் அதனை அருளால் விழைந்து உண்ணுதல்வேண்டும். அங்ஙனம் உண்ணாதவர் பிறப்பு இறப்பிற்பட்டு நீர்த்துளி சுழலுமாறு சுழன்று துன்புறுவர். (5) 2664. நமாதி நனாதி திரோதாயி யாகித் தமாதிய தாய்நிற்கத் தானந்தத் துற்றுச் சமாதித் துரியந் தமதாக மாகவே நமாதி சமாதி சிவவாதல் எண்ணே. (ப. இ.) நகராதி ஐந்தெழுத்து நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்குதல் ஆகிய ஐம்பாட்டினையும் நிகழ்த்துவிக்கும். திரோதாயி என்று சொல்லப்படும் நடப்பாற்றல் அந்நனவாதிகளைத் தூண்டித் தொழிற்படுத்தும் முதல்வியாகும். அதுவே அவ்வெழுத்துக்களுக்கும் ஆதியாய்நிற்கும். ஆவி அம்முடிபினை எய்தி அகநிலைச் செயலறலாகிய துரியமே தம்உடம்பாக நிற்கும். நிற்கவே நமாதிக்குச் சமமாகச் சிவமுதலாகத் தோன்றும். தோன்றவே 'சிவயசிவ' என எண்ணுவதே சிறப்பாகும் என்ப. (அ. சி.) நமாதி - நகரமுதல். தமாதியதாய் - அவ்வக்கரங்களுக்கு ஆதியாய். தான் - ஆன்மா. சமாதித் துரியம் - துரிய அவத்தை தமது ஆகமாக - தமது உடம்பு ஆக. சிவவாதல் - சி - வ முதலெழுத்துக்கள் ஆதல். (6) 2665. அருடரு மாயமும் அத்தனுந் தம்மில் ஒருவனை யீன்றவர் உள்ளுறு மாயை திரிமல நீங்கிச் சிவாயவென் றோதும் அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே.
|