1099
 

(ப. இ.) மேலோதியவாறு 'சிவயநம' என ஓதித் தம் சித்தத்தினைச் சிவனார்க்குச் சிறந்த உறையுளாக்குதல்வேண்டும். அஃதாவது நீங்கா நினைவாய்ச் 'சிவசிவ' என்று எண்ணிக்கொண்டிருப்பது. அந்நிலையே சித்தம் ஒருக்கும் நிலையாகும். அங்ஙனம் இருப்பதால் பேரிடர் அறும். பேரிடர் அறவே அடிமைநிலை கைகூடும். கைகூடவே நுண்மைத் திருவைந்தெழுத்தின் மேனிலை மீநுண்மைத் திருவைந்தெழுத்தாகும். அதுவே 'சிவயசிவ' என்ப. இத் திருமறையினை எத்தகைய இடுக்கண்களும் அகலும்பொருட்டு எண்ணிக் கணித்து நண்ணி நவின்று நாளும் வருதல்வேண்டும். இதுவே திருவைந்தெழுத்தின்வழி நிற்குமுறை யாகும். அங்ஙனம் நிற்கவே திருவடிப்பேற்றின் இயற்கை உண்மையறிவு இன்ப எழில்நல நுகர்வு கைகூடும். அதுவே பேரின்பப் பெருவாழ்வு என்ப.

(அ. சி.) அவாயம் - அபாயம்.

(1)

2670. செஞ்சுடர் மண்டலத் தூடுசென் றப்புறம்
அஞ்சண வும்முறை யேறி வழிக்கொண்டு
துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற 1லாகுமே.

(ப. இ.) செஞ்சுடர் மண்டிலம் ஞாயிற்று மண்டிலமாகும். அகத்தவப் பயிற்சியால் அம் மண்டிலத்தினூடு சென்று நிற்றல்வேண்டும். அதன்மேல் ஐயுணர்வும் 'தம்மை ஐந்து புலனும் பின்செல்லும் தகவாய்' ஒருங்கிக் கைகூடுதல்வேண்டும். கைகூடவே அவ்வழி ஏறிப்போய் அசைவின்றி இருத்தல் வாய்க்கும். சொல்லப்பட்ட அந்நேரத்து முழுமுதற் சிவபெருமான் நம்மைவிட்டு நீங்காச் செம்பொருளாய் நிலைபெற்றருள்வன். 'நெஞ்சென நீங்கா நிலைபே'றென்பதற்கு நம் நெஞ்சு நமக்கு வேறாக நில்லாது நம்முடன் வேறற விரவிநிற்பதுபோன்று புணர்ந்துநிற்பன் எனவும், நெஞ்சு நினைப்பூட்டுவதுபோன்று நினைப்பூட்டுவன் எனவும் கொள்க. இவ் வுண்மை வரும் அப்பர் அருண்மொழியான் உணரலாம்:

"துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை
நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை
வஞ்ச னேனினி நான்மறக் கிற்பனே."

(5. 93 - 8.)

(அ. சி.) அஞ்சணவுமுறை - ஐயறிவும் ஒன்றுபடுமாறு. வழிக் கொண்டு - போய். துஞ்சுமவன் - உலகத்தை மறந்திருக்கும் அவன். சொன்ன காலத்து - குறித்த காலத்தில்.

(2)

2671. அங்கமும் ஆகம வேதம தோதினும்
எங்கள் பிரானெழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட் டவ்வெழுத் தொன்றையுஞ் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கல 2மாகுமே.


1. நெஞ்சினைத். அப்பர், 4. 23 - 9.

2. கருமமு. நாலடியார், 250.

" அலகுசால். " 140.