2695. அடங்காத என்னை அடக்கி அடிவைத்து இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன் படந்தான்செய் துள்ளுட் படிந்திருந் 1தானே. (ப. இ.) பொறிபுலன் அடங்கி நன்னெறிக்கண் செல்லாத என்னைச் சிவகுருவாய் எழுந்தருளித் திருவடிசூட்டி அடங்கியொழுகுமாறு செய்தருளினன். எங்கணும் நிறைந்து என்றும் பொன்றாது ஊறும் பேரின்பப் பெருந்தேனை ஊட்டியருளினன். என் உணர்வின்கண் தன்னிகரில்லாத் திருக்கூத்தைப் புரிந்தருளுகின்றனன். அவன் திருப்பெயர் நந்தி என்ப. அவனே நன்ஞானக்கூத்தன். அடியேனைப் படத்தின்கண் காணப்படும் உயிர் ஓவியம் போன்று அசைவற நிற்றலாகிய நிட்டையில் கூட்டுவித்தனன். அதன்மேல் அடியேன் உணர்வினுள் படிந்திருந்தருளினன். (அ. சி.) இடங்காண் - பரந்த படந்தான். செய்து - சித்திரம் போல் அசைவறச் செய்து. (3) 2696. உம்பரிற் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனன்றே. (ப. இ.) திருக்கயிலையாகிய உம்பரின்கண் ஆருயிர் உய்யத் திருக் கூத்தியற்றும் கூத்தனை, முதல்வனாய்நின்று தலையாய திருக்கூத்தியற்றும் கூத்தனை, அழகிய செம்பொன்னம்பலத்தில் திருக்கூத்தியற்றும் சேவகக் கூத்தனை, ஆருயிரினோடு வேறற விரவிநின்று அவ்வுயிர்களைத் திருவடித் தொடர்வுபடுத்தும் சம்பந்தக் கூத்தனை, தானே முழுமுதலாக இருந்து திருக்கூத்தியற்றும் தற்பரக் கூத்தனை, அடியேன் இன்புறும் வண்ணமாக நாடி அத் திருக்கூத்தினைப் புரிந்தருளுகின்ற சிவனை அடியேன் அன்பினுள் வைத்து வழிபடுகின்றேன். (4) 2697. மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரன்றே. (ப. இ.) மணிமன்றினுள் நடம்புரியும் மாணிக்கக் கூத்தனை, செந்தமிழும் செந்நெறியும், சித்தாந்தமும் மிக்குப் பயிலும் வண்தில்லைக் கூத்தனை, சிறப்புப் பொருந்திய பெரியோர் வாழும் மூவாச் சீருடைத் திருச்சிற்றம்பலக் கூத்தனை, திருச்சடைக் கூத்தனை, அளவுபடாத சேணுற்ற அறிவுப் பேரொளியோடு நன்மை மிகுமாறு திருக்கூத்தியற்றும் சிவானந்தக்கூத்தனை, ஆணிப்பொன்னம்பலத்தே ஆருயிர்களைப் பேணிக் கூத்தியற்றும் ஆணிப்பொற்கூத்தனை அளவிட்டுரைக்கும் வன்மையர் யாவர்? (5)
1. ஆட்டுவித்தா. அப்பர், 6. 95 - 3.
|