"முன்னை யார்மயில் ஊர்தி முருகவேள் தன்னை யாரெனில் தானோர் தலைமகன் என்னை யாளும் இறையவன் எம்பிரான் பின்னை யாரவர் பேரெயி லாளரே." (5. 16 - 7.) திருமுருகனுக்கும் சிவபெருமானுக்கும் திருப்பெயர் முறை வேறுபாடேயன்றிப் பொருள் வேறுபாடின்று. முறையே அகத்து நீரும் ஆற்று நீரும் போன்று ஒன்றேயாம். இவ் வொப்பாலும் உணர்க. அவ் வுண்மை தேற்றவே திருமுருகப் பெருமான், தெய்வ நாச்சியாரையும், வள்ளி நாச்சியாரையும் ஒருங்கு திருமணம் புரிந்துகொண்டனர். ஈண்டுத் திருமணம் என்பது செவியறிவுறுத்து ஆட்கொள்ளுதல். இருவரும் ஆருயிர்களின் இருவேறு நிலைகளைக் குறிக்கும் குறிப்பாகும். ஒருவகை செம்புலத்தேவருள் வளர்தல். மற்றொருவகை ஐம்புல வேடருள் வளர்தல். இருவகையினரையும் சிவகுருவாக வந்து ஆட்கொள்பவன் திருமுருகன் ஒருவனே யாம். இஃதன்றித் திருமுருகனின் தொழிலாற்றல் விழைவாற்றல் எனக் கூறுவது உண்மைக்கு மாறாகும். திருவருளாற்றலின் நிலை பலவாமெனினும் பொருள் ஒன்றேயாம். முழுமுதற் சிவபெருமானின் திருவருளாற்றலையே அவனுக்கு மனைவி மக்களாக உருவகஞ் செய்வர் உண்மையுணர்ந்த நல்லார். அவ் வாற்றலுக்குப் பின்பு வேறோர் மனைவி மக்களாக உருவகிக்கும் மரபு யாண்டுமின்று. இவ் வுண்மை, 'செப்பும் சிவனார் திருவருளே மக்கள் மனை ஒப்பாம் அவர்க்கவையின் றோர்.' என்பதனால் நினைவு கூர்க. படி முறையான் வெவ்வேறு நெறிகளினுள்ளாரனைவர்கட்கும் சிவகுருவாய் - அறுமுகக் குருபரனாய் விளக்கஞ் செய்தருளி அவ்வந் நெறிக்கண் நிற்பவனும் சிவனே. இவ் வுண்மைகளைத் திருவருளால் தேர்ந்து தெளிந்தவர் தென்பால் தில்லைக்கண் திருச்சிற்றம்பலத்தினிடத்தே வேற்றுமையின்றி விரவி நின்றருள்பவன் சிவனே எனவும் அவனே அண்ணலாகவும் விளங்கியருளுகின்றனன் எனவும் திருமுறைகள் ஓதும் செவ்விய நுட்பத்தினை அருளால் உணர்வர். (அ. சி.) ஆறுமுகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம், அதோமுகம். (10) 2713. அம்பலம் ஆடரங் 1காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளி னீரொளி உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. (ப. இ.) திருச்சிற்றம்பலமே ஆடும் அரங்கமாகக்கொண்டு அதன் கண் எம்பெருமானாகிய சிவபெருமான் திருக்கூத்தியற்றுகின்றனன். எம்பெருமான் தன் இரண்டு திருவடிகளிலும் இருபெரும் அறிவொளி தோன்றுமாறு திருக்கூத்தியற்றுகின்றனன். இருபெரும் ஒளி நூலுணர்வும் நுண்ணுணர்வுமாகும். மேலோங்கி ஒளிரும் ஐவகை ஓசையின் கோட்டின் கண்ணும் நின்று திருக்கூத்தியற்றுகின்றனன். அம்மட்டோ?
1. ஒளிவளர். 9. திருமாளிகைத்தேவர், கோயில், 1.
|