1130
 

சுவையும் குறிப்பும் ஒழிவில தோன்றி
அவையவை யல்வழி யாடினன் ஆட
மைந்தரு மகளிரும் தந்நிலை யழிய
மெய்ப்படு சுவையொடு கைப்படை மறப்பக்

10 கடிய காலக் காற்றென ஏற்றவன்
படிநிலை திரியாப் பாண்டரங் கம்மே."

மானிடர் என்னும் பாடத்திற்கு மானை இடக்கையின்கண் உடைய சிவபெருமான் என்க.

(அ. சி.) மானிடர் - மான் + இடர் - மானை இடக்கரத்துப்பக்கம் உடையவர். கணம் ஆரம் - வரிசையாக உள்ள கூட்டங்கள்.

(15)

2731. அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.

(ப. இ.) வெவ்வேறாகிய அண்டங்களில் உள்ள தேவர்களும், ஏனைப் புற அண்டங்களிலுள்ள தேவர்களும், தெளிந்த அலைகளையுடைய கடலாற் சூழப்பட்ட உலகங்களுக்குள்ளுள்ள தேவர்களும், செந்தாமரை மலரை யொத்த திருவடித் தாமரையைத் தூக்கிப் பொன்னம்பலத்தின் கண்ணே முழுமுதற் சிவபெருமான் புரியும் திருக்கூத்தினைக் கண்டு தொழுது வழிபட்டனர். அதனால் அவர்தம் பெருநிலையினை எய்தியுள்ளார்கள். இன்னும் வழிபடுவதனால் மேனிலையும் அடைவார்கள்.

(அ. சி.) அப்பாலை - புறவண்டம்.

(16)

2732. புளிக்கண் டவர்க்குப் புனலூறு மாபோற்
களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குளா னந்தத் தமுதூறும் உள்ளத்தே.

(ப. இ.) புளியினைக் கண்டவருக்கு நாக்கின்கண் புனலூறுவது இயல்பு. இது காட்சியினாலேயே மீட்சியில் மாட்சியின்பம் உண்டென்பதனை உணர்த்துகின்றது. அதுபோன்று அனைவர்க்கும் தனை நிகர் களிப்பினைத் தரும் தில்லைத் திருச்சிற்றம்பலக் கூத்தனைக் காதலுடன் கண்டவர்கட்கெல்லாம் இன்பக் கண்ணீர் துளித்து முத்து முத்தாக வடியும். நெஞ்சமானது அன்பின் மேலீட்டினால் தழல் கண்ட வெண்ணெய் போன்று உருகா நிற்கும். உள்ளத்தின்கண்ணே உணர்வொளிக்குள் விளைந்த வற்றாப் பேரின்பத்தமுதூறும்.

(17)

2733. திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க் குணவுண்டால் உன்மத்தஞ் சித்திக்குங்
கொண்டாடு மன்றுட் குனிக்குந் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணங் கேட்டார்க்கும் ஒக்குமே.