(அ. சி.) துடி - உடுக்கை. கருவில் - முயலகன்மீது. உருவில் - சூக்குமமான. (37) 2753. அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன்அங்கி தன்னில் அறையிற்சங் காரம் அரனுற் றணைப்பில் அமருந் திரோதாயி அரனடி யென்றும் அனுக்கிர கம்மே. (ப. இ.) பேரொடுக்கப் பெருமானாராகிய அரனார் உடுக்கையால் படைப்பும், அமைவுக் கையால் காப்பும், மழுவேந்திய திருக்கையால் துடைப்பும், ஊன்றிய திருவடியால் மறைப்பும், நான்ற (தூக்கிய) திருவடியால் அருளிப்பாடும் முறையே நிகழ்வனவாகும். அணைப்பில் - ஊன்றிய திருவடியில். அரனடி - எடுத்த பொற்பாதம். இவ்வுண்மை வரும் உண்மை விளக்கத் திருப்பாட்டான் உணர்க: "தோற்றந் துடியதனில் தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு." (35) (அ. சி.) அணைப்பில் - ஊன்றிய பாதத்தில். அரனடி - தூக்கிய பாதம். (38) 2754. தீத்திரட் சோதி திகழொளி யுள்ளொளி கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைசெல்லப் பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானன்றே. (ப. இ.) அளவில்லாத தழற்கூட்டங்கள் ஒன்று திரண்டு கொழுந்து விட்டு விளங்கும் திகழொளியாகவுள்ளவன் சிவன். அவன் ஒளிகள் அனைத்தினுக்கும் ஒளிகொடுத்து ஒளிரும் பேரொளி. அவனே பெருங்கூத்தன் அவனை ஆருயிர் உய்ய அகமுறக்கண்ட அழகிய திருக்கண்களையுடையவள் சிவகாமி அம்மை. அயன், அரி, அரன் என்னும் மூவரும் முறையே ஒடுங்குங்காலத்து அருளோன்கண் ஒடுங்குவர். அருளோன் - சதாசிவன். மேலோதப்பட்ட மூவரும் ஆசான் மெய்க்கண் உறைபவர். ஆசான்மெய் - சுத்தவித்தை. அச் சிவகாமியம்மையார் திருவுள்ளங்கொண்டருளினள். அவள்தானே அருமறை பாடியருளினள். பாடியருளுதல்: பாடுவாருள்ளத்துள் நின்று பாடுவித்தல். (அ. சி.) கோமளம் - அழகு. முதல்வன் - சதாசிவம். (39) 2755. நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திர மொன்றுள் மருவி யதுகடந்து அந்தர வானத்தின் அப்புறத் தப்பர சுந்தரக் கூத்தனை என்சொல்லும் மாறன்றே. (ப. இ.) நந்தியாகிய முழுமுதலை, எந்தையை, எழிலார் மெய்யுணர்வுத் தலைவனை ஒப்பில்லாத ஓமொழி வண்ணமாம் திருவைந்தெழுத்
|