2761. அண்ட வொளியும் அகண்ட வொளியுடன் பிண்ட வொளியாற் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது 1தானன்றே. (ப. இ.) அண்டத்துக்குத் திருவாணையால் ஒளிதரும் ஞாயிற்றின் ஒளியும், எல்லையில்லாது எல்லாவற்றிற்கும் ஒளிகொடுத்தொளிரும் அகண்ட வொளியாகிய சிவவொளியும், பிண்டமென்று சொல்லப்படும் ஆருயிர் உடம்பகத்துக் காணப்படும் அறிவொளியும் அருளால் ஆயுங்கால் நீயே என்ற பேரன்பால் பிதற்றத்தகும். பெருமையையுடையை. உண்டவெளி: உண்டு + அவ்வெளி. ஆருயிரின் உடம்பகத்து ஒளியை அண்டவொளியாகிய ஞாயிற்றின் ஒளி விழுங்கிற்று. அதனால் உடம்பின்நிலை, கட்டுக் குலைவதாயிற்று. (அ. சி.) அண்ட ஒளி - சூரிய ஒளி. அகண்ட ஒளி - சிவ ஒளி. பிண்ட ஒளி - சீவ ஒளி. கொண்டகுறி - சரீர அமைப்புக்கள். (3) 2762. பயனுறு கன்னியர் போகத்தி னுள்ளே பயனுறு மாதி பரஞ்சுடர்ச் சோதி அயனொடு மாலறி யாவகை நின்றிட்டு உயர்நெறி யாயொளி யொன்றது 2வாமே. (ப. இ.) அன்பியற் சிற்றின்ப நுகர்வின்கண் கற்புறுகன்னியர் எங்ஙனம் துணையாகின்றார்கள் என்பது யாவரும் அறிந்த இயல்புடைய ஒன்று. அதுபோல் அருளியற் பேரின்பத்தின்கண் ஆதிப்பரஞ்சுடர்ச் சோதியானவன் அம்மைப் பயனுறு துணையாகச் செம்மையாக நிற்பன். அவன் அயனொடு மாலும் அறியாவகைத் துளங்கா எரிசுடராய் நின்றவன். அங்ஙனம் நின்று உயர்நெறியாயவன். அவன் ஒப்பில் ஓரொளியாயவன். அப்பொருள் முழுமுதல் ஒன்றேயாகும். (அ. சி.) பயனுறு....சோதி - சிற்றின்பத்துக்குக் கன்னியர் பயன் படுவர்; பேரின்பத்துக்குச் சிவன் பயன்படுவர். (4) 2763. அறிவுக் கறிவாம் அகண்ட வொளியும் பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும் அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியா திருக்கிற் பெருங்கால மாமே. (ப. இ.) அறிவுக்கு அறிவாய் விளங்கும் எல்லையில் பேரொளி அறிதற்கரிய சிவவொளி எனப்படும். அவ்வொளியின் வயப்பட்டு விட்டு நீங்காது நிற்கும் பேரொளி மூன்று. அவை அண்டவொளி அகண்டவொளி, பிண்டவொளி என்ப. இவற்றை எல்லை சேரொளி எல்லை தீரொளி, நல்ல உடலொளி என நவில்ப. இவ்வொளிகள் மூன்றும் ஒன்றும் தோன்றா நிலையாய்ச் சிவன் நினைவாகவே நிற்றல் வேண்டும். நின்று அவன் திருவடிக்கீழ் அடங்குதல்வேண்டும். அடங்கிப்
1. இல்லக. அப்பர், 4. 11 - 8. 2. பெருவரை. சம்பந்தர், 3. 10 - 9.
|